மலைக்கு அடியில் 8,000 நிலநடுக்கங்கள்! ஆய்வாளர்கள் நடத்திய மிக பயங்கர சோதனை..
சுவிட்சர்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள BedrettoLab ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் பாதுகாப்பான மற்றும் கண்காணிக்கப்பட்ட சூழலில் 8,000 சிறிய நிலநடுக்கங்களை செயற்கையாக ஏற்படுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு, நில அதிர்வுகள் எப்படி உருவாகின்றன மற்றும் பூமியின் அடிப்பகுதியில் அழுத்தம் எவ்வாறு சேர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்டது.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடர்
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அடியில் அமைந்துள்ள இந்த ஆய்வகம், மலைக்குள் ஐந்து கிலோமீட்டர் நீளமான சுரங்கப்பாதையில் உள்ளது.
அங்கு செல்ல விஞ்ஞானிகள் சிறப்பு மின்சார வாகனங்களை பயன்படுத்தினர்.

இந்த ஆய்வை ETH Zurich பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Domenico Giardini தலைமையில் அவரது குழு முன்னெடுத்தது. ஆய்வு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
“எங்களின் மேல் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் உயர மலை உள்ளது. அதனால் பிளவுகள் எப்போது நகர்கின்றன, எப்படி நகர்கின்றன என்பதை நெருக்கமாக கவனிக்க முடிகிறது. அவற்றை நாங்களே நகர்த்தியும் பார்க்க முடிகிறது,” என்று ஜியார்டினி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஏன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது? பூமியின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை தெளிவாக அறிந்து, எதிர்காலத்தில் அவை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை குறைக்கும் வழிகளை கண்டுபிடிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
நில அதிர்வுகள்
பாறைகள் நகர்வதும், பூமிக்குள் அழுத்தம் அதிகரிப்பதும் நிலநடுக்கங்களை எவ்வாறு தூண்டுகின்றன என்பதை அறியவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்திற்கு FEAR-2 (Fault Activation and Earthquake Rupture) என்று பெயரிடப்பட்டது.

இதில் பல ஐரோப்பிய நாடுகளும் இணைந்து பங்கேற்றன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் போது நூற்றுக்கணக்கான சென்சார்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு அதிர்வும் பதிவு செய்யப்பட்டது.
திட்டமிட்ட அளவிலான அதிர்வு எட்டப்படவில்லை என்றாலும், ஆய்வுக்கு தேவையான முக்கிய தரவுகள் கிடைத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
“நாங்கள் நிர்ணயித்த அளவிலான அதிர்வை அடையவில்லை. ஆனால் அதற்கு மிக அருகில் சென்றோம்,” என்றும் ஜியார்டினி கூறினார்.
இந்த நில அதிர்வுகள் மிகவும் குறைந்த அளவில் இருந்ததால், பூமியின் மேற்பரப்பில் இருந்த பொதுமக்களுக்கு உணரப்படவில்லை. இருப்பினும், நிலத்தடியில் பொருத்தப்பட்ட கருவிகள் அனைத்து அதிர்வுகளையும் துல்லியமாக பதிவு செய்தன.
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam