தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி..! குற்றஞ்சாட்டும் நாமல் ராஜபக்ச
நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. 22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களை கருத்திற்கொள்ளவில்லை. மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக உள்ளனர். எனினும், இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை.
22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது.
ஜனாதிபதிக்கு ஆலோசனை
நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கிறார். நீதித்துறையை அரசியல்மயப்படுத்துவதால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

22ஆவது திருத்தம் தொடர்பில் உரிய தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே தீர்மானம் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அந்த சிரேஷ்ட தரப்பினர் யார் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.