இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரமதர் யார் - பலரின் பெயர்கள் பரிந்துரை
நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்திற்கமைய புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் முதலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயரும் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானவர்கள் பொன்சேகாவுக்கு தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாலிய பீரிஸை ஜனாதிபதியாக நியமிக்க யோசனை
இதேவேளை, ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், இந்த பதவிகளுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸை ஜனாதிபதி பதவிக்கு நியமிப்பதற்கு மூன்று முன்னாள் ஆளுநர்கள் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர்களின் பெரும்பான்மை அடிப்படையில் ஜனாதிபதி நியமனம் மேற்கொள்ளப்படும்.
நாடாளுமன்றம் கூடிய பிறகு, பெரும்பான்மை எம்.பி.க்களின் ஒப்புதலின் அடிப்படையில் பிரதமர் நியமிக்கப்படுவார்.