கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார் - ஆங்கில ஊடகம் தகவல்
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி மாளிகையை விட்டு பாதுகாப்பாக வெளியேறியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கையை விட்டு வெளியேறுவார்
]
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை அறிவித்திருந்தார். எனினும், சிறிது நேரத்தில் அவர் அந்த தகவலை மீளப் பெற்றிருந்தார்.
எவ்வாறாயினும், சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து விரைவில் கப்பலில் பாதுகாப்பாக ஏறிய ஜனாதிபதி, இன்று நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், புதன்கிழமை பதவி விலகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கையை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடைகளை தாண்டி ஜனாதிபதி மாளிகையை அடைந்த போராட்டகாரர்கள்
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கொழும்பிற்கு வந்த பெருந்தொகையான மக்கள் கூட்டம் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சனிக்கிழமை ஜனாதிபதி அரச மாளிகையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்திய அதே வேளையில் இராணுவத்தினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
எனினும், இளைஞர்கள் மற்றும் முதியோர் என இருபாலரும் தடைகளை தாண்டி ஜனாதிபதி மாளிகையை அடைந்தனர் என அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.