ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - குமார குணரத்ன
புதிய ஜனாதிபதியாக யார் நியமிக்கப்பட்டாலும் போராட்டகாரர்களின் அபிலாஷைகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சி குறிப்பிடுகிறது.
ராஜபக்ச ஆட்சியின் ஆணை ஒழிக்கப்பட்டு தற்போது நாட்டில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் குமார குணரத்ன குறிப்பிடுகின்றார்.
எனவே, மக்கள் சக்தியின்றி எவராலும் அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எவரும் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள பெரும்பான்மையான இடதுசாரிகளைப் போன்று தானும் தற்போதுள்ள அரசியலமைப்பை ஏற்கவில்லை எனவும் எனவே கூடிய விரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க பாடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மேலும் பதிலடி கொடுப்பார்கள்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனநாயகத்தை விட ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், போராட்டத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
போராட்டத்தை முன்னின்று நடத்தவே முன்னோடிகள் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறும் அவர், பிரதமரின் வீட்டை எரித்தது ஒரு சதி என்றும் போராட்டக்காரர்கள் இதில் ஈடுபடவில்லை என்றும் கூறுகிறார்.
தான் பதவி விலகுவேன் என்று கூறியுள்ள ஜனாதிபதி, அது தொடர்பில் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை, பதவி விலகாவிட்டால் மக்கள் மேலும் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.