யார் இந்த சபேசன்? - முன்னாள் போராளி குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த கபிலனுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சபேசன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எர்ணாகுளம் மாவட்டம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு சிறப்பு பொலிஸாருக்கு மாற்றப்பட்டு ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுரேஷ் மற்றும் சவுந்தரராஜன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களின் 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகரில் தங்கி இருந்த சத்குணம் என்கிற சபேசன் என்ற இலங்கை தமிழர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் செல்போன், சிம் கார்டுகள், டேப்லட் உள்ளிட்ட 7 டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்த உடந்தையாக செயல்பட்டவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருபவருமான இலங்கை தமிழர் சத்குணம் என்கிற சபேசனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து நடத்தினர்.
உலகம் முழுவதும் ஒரு அரசுக்கு எதிராகவோ, ஒரு நாட்டிற்கு எதிராகவோ அந்த நாட்டிற்குள்ளேயே போராட்டம் நடத்தும் குழுவினருக்கு நிதி ஆதாரம் தேடித் தருவது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல் தான்.
இதில் போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலை கையிலெடுத்த விடுதலை புலிகள், அந்த கடத்தல்களை தமிழகம் மூலம் விரிவுபடுத்தவும் தமிழகத்திலிருந்து செயல்படுத்தவும் அனுப்பி வைக்கப்பட்ட நபர்தான் சபேசன்.
இளமைக் காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பல வருடம் பணியாற்றிய சபேசன் முக்கிய பொறுப்புகளில் பங்காற்றி படிப்படியாக உயர்ந்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறையின் பொறுப்பாளரான பொட்டு அம்மானுக்கு அடுத்தகட்ட பொறுப்பாளராக இருந்த கபிலன் என்பவருக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக சபேசன் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2005ல் தமிழகம் வந்த சபேசன், அப்போது கைதாகி 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். பின் 2010ல் வெளியே வந்த அவர், கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பொலஸார் கண்களில் படாமல் சாதாரண தொழில் செய்து வருவது போல் காட்டிக்கொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் தங்கி பணப்பரிவர்தனை நிறுவனத்தை நடத்திகொண்டே பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து போதை பொருட்களை கடத்தி அதன் மூலம் ஆயுதங்களை கைமாற்றி இலங்கைக்கு ஆயுதமாகவும் பணமாகவும் அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான வங்கி விபரங்களை சேகரித்துள்ள என்ஐஏ அதிகாரிகள் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவதற்கும், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் சபேசன் தீவிரமாக ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
சபேசனின் கூட்டாளி ஒருவர் தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு கட்சிகள் சிலவற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சபேசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ள போதிலும் அவர்கள் சபேசனை பிரிந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றனர்.
தான் எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், தனியாக தொழில் செய்து வருவதாக, க்யூ பிரிவு பொலிஸார் மற்றும் சென்னை சட்ட ஒழுங்கு பொலிஸாரை நம்ப வைத்து கடத்தல் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri