இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக அந்த மண்ணில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மட்டுமே தோற்கடிக்கப்பட்டது.
அதுவும் சிங்கள தேசத்தினால் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வகை தொகையற்ற மனிதப் படுகொலையின் மூலம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
எதிரி மேற்கொண்ட இனப்படுகொலை என்பது தமிழ் மக்களுக்கு பேரிழப்பை, பேரழிவை, தாங்கணாத் துயரை தந்தது இதனை முதலாம் முள்ளிவாய்க்கால் என்று சொல்வோம்.
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. என்பது உண்மைதான். அவ்வாறு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கான பொறுப்பை ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அனைவரும் பொறுப்பேற்றனர் என்பதும் உண்மையே.
வயோதிப தலைவர்கள்
பொறுப்பேற்பு என்பது இங்கே முக்கியமானது. தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்திற்காக ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்ற கொள்கையை கையில் எடுத்து அந்தக் கொள்கையை முற்று முழுதாக நம்பி போராடினார்களோ அந்தக் கொள்கைக்காக தங்கள் இறுதி மூச்சு வரை போராடி குடும்பம் குடும்பமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர்.
முள்ளிவாய்க்காலில் தம்மை ஆகுதியாக்கியதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கான பொறுப்பையும் அந்த உன்னதமான மனிதர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அது ஈழவிடுதலைப் போராளிகளின் நேர்மைக்கும், வீரத்திற்கும், மனித குல வரலாற்றின் மாண்பிற்கும், மீட்சிக்குமான முன்னுதாரணமாகும். தோல்விக்கு பொறுப்பேற்பது என்பது சிறந்த தலைமைத்துவத்தின் பண்பாகும்.
அந்தப் பண்பை தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் பொறுப்பேற்றார்கள். முள்ளிவாய்க்காலில் சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்ட மனித படுகொலையானது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையில் இனப்படுகொலை (Genocide) என்ற ஒரு வரத்தையும் கூடவே தந்துவிட்டுத்தான் சென்றிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் தந்த இனப்படுகொலை என்ற வரத்தை சாபமாக்கி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் எதிரிக்கு சேவகம் செய்து தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஆதள பாதாளத்தில் வீழ்த்தி விட்டனர். இதனை இரண்டாம் முள்ளிவாய்க்கால் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்? யார் யார் சூத்திரதாரிகள்? என்பதை இனம் காண்பதன் மூலமே தமிழ் மக்களின் விடுதலைக்கான அடுத்தகட்ட பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய ஒரு 30 வருட கால அரசியல் தோல்விக்கும், ஆயுத ரீதியான முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பின்னான கடந்த 15 ஆண்டுகால அரசியல் தோல்விக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எனப்படும் தற்போதைய வயது முதிர்ந்து அந்திமக்காலத்தை எட்டியிருக்கும் இந்த வாழ்நாள் தலைவர்கள் பொறுப்பேற்பார்களா? அதற்கான மனமும், இதய சுத்தியும், மனச்சாட்சியும், குற்ற உணர்வும் இவர்களிடம் உண்டா?
தமது தோல்விகளுக்கு பொறுப்பேற்காதது மாத்திரமல்ல தமது தோல்விகளை தொடர்ந்தும் தொடர்வதற்கு புதிய நச்சுப் பாம்புகளையும், நரிகளையும் உருவாக்கியதோடு அவர்களை வளர்த்துச் செல்லும் இந்த வயோதிபத் தலைவர்களுக்கு மன்னிப்பு உண்டா? அந்தப் பாவச் செயலுக்கு பிரயச்சித்தம் செய்ய வேண்டுமாக இருந்தால் இவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி கடந்த கால தோல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையே தமிழ் தேசிய அறிவியல் பரப்பு வேண்டி நிற்கிறது.
ஆனால், எதிரியோ தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையை குழப்புவதற்கும், முடக்குவதற்கும், சீரழிப்பதற்கும் அழிப்பதற்குமாக திட்டமிட்டு செயல்படுகிறான். தமிழரசியல் கட்சிகளுக்குள்ளும், கல்வி பீடங்களுக்குள்ளும், நிர்வாக இயந்திரத்துக்குள்ளும் தமிழ் தேசியத்தை அழிக்க வல்ல தமிழ் தேசிய விரோதிகளை விலை கொடுத்துவாங்கி களம் இறக்கியுள்ளான்.
அத்தகைய விலைபோன நாசகாரிகளும், உளவாளிகளும், கையாக்களும் தமிழ் மக்கள் மத்தியில் நல்லவர்கள் போல் நடித்து தமிழ் தலைவர்கள் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டனர். தமிழ் தலைவர் என்ற போர்வையில் தமிழ் அரசியல் பரப்பில் உலாவரும் இந்த அரசியல் நாசகாரிகள் தமிழ் அரசியல் கட்சிகளை பலவாறாக உடைப்பதிலும், சிதைப்பதிலும், தமிழ் மக்களை போராட்டத்தில் நம்பிக்கை இழக்கச் செய்வதிலும், தமிழ் தேசியத்தை சிதைப்பதிலும் ஒரு கட்ட வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றனர்.
சுமந்திரன்
இது மிக மிக அபாயகரமான ஒரு நிலையை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது இத்தகைய ஓடுகாலி அரசியல் தலைவர்களாலும், உளவாளிகளாலும், தமிழ்த் தேசிய விரோதிகளாலும் தமிழ் மக்கள் பல்வேறு வகைகளில் பிரிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு, சீரழிவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் ஜனாதிபதித் தேர்தல் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்தி, தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தி தமிழ் வாக்குகளை ஒன்று குவிப்பதற்கான முயற்சியில் தமிழ் சிவில் சமூகம் முனைப்புடன் செயற்படத் தொடங்கி இருக்கிறது. தமிழ் மக்கள் ஐக்கியப்படுவதையோ, , தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்படுவதையோ, தமிழ் சிவில் சமூகங்கள் ஒருமித்து ஓர் குடையின் கீழ் நிற்பதையோ எந்த எதிரியும் விரும்ப மாட்டான்.
அந்த அடிப்படையில் தமிழர்கள் ஐக்கியப்படுவது என்பது சிங்கள தேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவோ, சவாலாகவோ மாறும். எனவே ஏற்படப்போகின்ற பெரும அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்கு சிங்கள தேசத்தால் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவி விடப்பட்ட புல்லுருவிகள் இப்போது சிங்கள தேசத்தின் ஆணைக்கிணங்க வெளியே வந்து செயல்பட தொடங்கி விட்டார்கள்.
அது சுமந்திரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் 09-06-2024 அன்று யாழ் மத்திய கல்லூரியில் செல்வநாயகம் ஞாபகார்த்தக் கேட்போர் வெளிப்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசியம் என்று பாசாங்கு அரசியல் செய்த பலரும் அங்கே மேடையில் குந்தி இருந்தனர். வாழ்நாள் முழுவதும் சிங்கள அரசின் ஊழியர்களாக அனைத்து சலுகைகளும் பெற்ற அரச ஊழியர்கள் வயோதிப காலத்திலும் தொடர்ந்து அரசின் நலன்களை பெற்றுக்கொண்டு தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்தையே அந்த மேடையில் தலைமை தாங்கி உரையாற்றினர்.
அது சீ.வி.கே சிவஞானமாக இருந்தால் என்ன பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையாக இருந்தால் என்ன இருவரும் இப்போது துலாம்பாமாக தமிழ்த் தேசிய எதிர்ப்பு என்ற மேடைக்கு வந்துவிட்டனர். அவ்வாறே இவ்வளவு காலமும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்காக போட்டியிட்ட சுமந்திரனால் ஒட்டுக் குழுக்கள் என்றும், ஆயுததாரிகள் என்றும், துரோகிகள் என்றும் சொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் இவர்கள் அணியில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
அப்படியானால் இப்போது சந்திரகுமாரும் சுமந்திரனின் பார்வையில் தியாகியாகி ஆகிவிட்டார் போலும். யார் துரோகி? யார் தியாகி? என்பதை அவரவர் செயல்களே மெய்ப்பிக்கின்றன. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன் பேச்சின் தொனியும், அவருடைய அங்க அசைவுகளும் அவரின் தமிழ் தேசியவாதிகளின் மீதான வன்மத்தை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. எதிரியின் கட்டளைக்கு பணிந்து அவர் மிகக் கடுமையாக நடந்து கொண்டார் என்பதையும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிக்கின்ற அந்த வேணவாமே வெளிப்பட்டதைக் காணமுடிகிறது.
ஒரு மனிதன் தன் வாழ்க்கை முறையாலும், மண்ணோடு ஒட்டிய வாழ்நிலையிலும்தான் அவன் அந்த மண்ணுக்குரிய இயல்பைப் பெறுகிறான். அந்த மண்ணுக்குரிய தேசியத் தன்மையை பெறுகிறான். தேசிய வாழ்வை விரும்புவனாகிறான். ஆனால் சுமந்திரன் வாழ்க்கை முறையாலும் மண்ணோடு ஒட்டிய வாழ் நிலையாலும் சிங்களத்தோடு பின்னிப்பிணைந்தவர். குடும்ப உறவு முறையாலும், அவர் வாரிசுக்களின் வாழ்க்கை தெரிவுகளினாலும் அவர் சிங்கள மயப்பட்டுவிட்டவர்.
அரசியல் என்பது தன்னுடைய எதிர்கால சந்ததியின் நிலையான, நீண்ட எதிர்கால பண்பாட்டு வாழ்வுக்கானது. ஆனால் இவை அனைத்தும் தமிழினம் என்ற பண்பாட்டோடு சுமந்திரனின் எதிர்கால குடும்ப வாரிசுகள் இருக்கப் போவதில்லை என்ற அடிப்படையில் அவர் தமிழ் தேசியத்தோடு நிற்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.
அத்தகையவருக்கு தமிழ்த் தேசிய இனத்தின் வலியும் தெரியாது உரிமை பற்றிய உணர்வும் கிடையாது. தன்னுடைய சொந்த சுயநலன்களும் சுகபோகங்களுமே முதன்மைப்படுவதாக அமையும். தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றவர் அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று புதிய தலைவராக தொரிவான சிவஞானம் ஸ்ரீதரனை பணியாற்றுவதற்கு இடம் கொடுக்காமல் பல வாழக்குகளை தன் கையாள்களை கொண்டு பதிவு செய்து தமிழரசு கட்சியின் புதிய தலைவரை முடக்கியது மாத்திரமல்ல கட்சியையும் முடக்கி வைத்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில் இவரால் சாதித்தது என்ன? தமிழ் மக்கள் சார்ந்த வழக்குகளுக்கு முண்டியடித்துச் செல்லும் இவரால் தமிழ் மக்களுக்கு ஏதாவது வெற்றியை பெற்றுக் கொடுத்தாரா என்றால் அதுவும் இல்லை. அதே நேரத்தில் சிங்கள தேசத்துடன் இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் இவரால் வாக்களிக்க தேர்ந்தெடுத்த சிங்களத் தலைவர்கள் வெற்றி பெறவில்லை. அவ்வாறே குறை நிரப்பு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான உள்ளக வாக்கெடுப்பிலும் இவர்கள் வாக்களித்தவர் வெற்றி பெறவில்லை.
தமிழரசு கட்சிக்கு பின்னடைவு
ஆக மொத்தத்தில் தமிழ் மக்கள் சார்ந்து இவர்கள் எதனையும் சாதிக்க முடியவில்லை சரியான முடிவை எடுக்கவுமில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் வாக்குக்களை அளித்து சிறிசேன - ரணில் ஆட்சியை கொண்டுவந்த இவர்களது கூட்டாளிகள் தெளிவாக முதுகில் குத்தியதே மிச்சம். அக்கால கட்டத்தில் “புதிய அரசியல் யாப்பு ஒன்று வரும் அவ்வாறு வராவிட்டால் நான் பதவி விலகுவேன்“ என்று பலமுறை மேடைகளிலே பேசியவர் இன்னும் பதவி விலகவில்லை.
இத்தகையவர் ஜனநாயகம் பற்றி பேசுகிறார். இவர் முதலில் ஜனநாயக முறைக்குள் நடக்கவும், வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் “போர் குற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது“ என்று ஒரு கட்டு பேப்பரை மேடையிலே தூக்கி போட்டார். அந்தப் போடப்பட்ட பேப்பர் கட்டு ஏதோ ஒரு தரவுகளை தாங்கிய பேப்பர் கட்டு.
ஆனால் இவ்வாறு அந்தப் போர் குற்ற விசாரணை முடிந்துவிட்டது என்ற ஆவணத்தை ஊடகங்களுக்கோ, மக்களுக்கோ வெளிபடுத்தவில்லை. இவ்வாறு பொய்யிரைப்பது இவருக்கு சகஜம். ஏனெனில் இந்த வழக்கறிஞர் திருடனை நல்லவன் என்றும் கொலையாளியை அப்பாவி என்றும் பேசிப் பழக்கப்பட்டவர்.
உண்மையை பொய்யைாக்க வாதிடும் இவர் போன்ற சட்டத்தரணி தொழில் முறைக்குள் இருந்து வந்தவர்களுக்கு கடைந்தெடுத்த சுயநலமே வாழ்க்கை முறை. அந்த அடிப்படையில்தான் இப்போது தமிழ் சிவில் சமூகங்களை எதிர்த்து, நிராகரித்து, ஏளனம் செய்து பேசுகிறார். தமிழ் சிவில் சமூகம் என்பது கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக அளப்பரிய பணியாற்றி இருக்கிறது. அவர்கள் எந்த பதவிகளையும், பட்டங்களையும் விரும்பி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை.
முற்றிலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்று அவர்கள் நம்புவதை மாத்திரமே செய்தார்கள். அவர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உதாரணமாக மட்டக்களப்பு அன்னையர் முன்னணியிலிருந்து அன்னை பூபதி, இந்திய - புலிகள் யுத்த காலத்தில் யுத்த நிறுத்தத்தை வேண்டி தமிழ் மக்களுடைய அழிவை நிறுத்துவதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தார்.
அவ்வாறே அன்றைய காலத்தில் மட்டக்களப்பு சிவில் சமூகம் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு பலர் தம் உயிர்களை அர்ப்பணித்தார்கள். அவ்வாறே யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் அன்றைய காலத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட மனிதநேயப் பணிகளின் போது 40இற்கும் மேற்பட்ட சிவில் சமூக உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த சிவில் சமூக உறுப்பினர்கள் பலியானார்கள். இவர்கள் பதவிகளை பட்டங்களையோ, பணத்தையோ விரும்பியவர்கள் அல்ல. தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதே என்ற ஒரே ஒரு நோக்கத்தை மாத்திரமே மனதில் நிறுத்தி செயல்பட்டு தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். அவ்வாறே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சிவில் சமூகம் தமிழ் மக்களை தாயக மண்ணில் தொடர்ந்து நிலை பெறுவதற்கும் அவர்களை பாதுகாப்பதற்குமான பல்வேறு வகைகளில் அரசியல் அறிவியல் சமூகவியல் தளங்களில் உழைத்திருக்கிறார்கள்.
அத்தகையவர்களை ஏளனம் செய்வதோ, அவருடைய பணிகளை மல்லினப்படுத்துவதோ மன்னிக்க முடியாத குற்றமாகும். “அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு சிவில் சமூகத்துக்கு அதிகாரம் இல்லை எங்களுக்குதான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். நாங்கள்தான் வாக்களிப்பின் மூலம் வந்தோம்“ என்கிறார் சுமந்திரன்.
அவருக்கு ஒன்று புரியவில்லை போலும். இந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்போர் அடிமட்ட மக்களின் பிரதிநிதிகள் என்பதையும், இரகசிய வாக்கெடுப்பின் மூலமே அவர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளாகவோ, சங்கங்களின் பிரதிநிதியாகவோ, நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்ல இந்த சிவில் சமூகத்தின் அனுசரணை இல்லையேல், ஆதரவில்லையேல் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் யாருக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இவர்கள் எந்தக் கட்சியின் கீழ் நிற்கிறார்களோ அந்தக் கட்சிக்கும் யாரும் வாக்களிக்கப் போவதுமில்லை.
எனவே தமிழரசுக் கட்சியை இல்லாது அழித்தொழிக்கின்ற நிகழ்ச்சி நிரலின் வெளிப்படையான முதல் நிகழ்வாகவே இந்த கூட்டத்தை பார்க்க வேண்டும். எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுமந்திரன் போட்டியிடுகின்றபோது தமிழரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவையே இது ஏற்படுத்தும்.
தமிழீழ மண்
இந்த இடத்தில் தமிழரசுக் கட்சி தன்னை பாதுகாப்பதற்கு இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜனநாயகம் பற்றி பேசுகின்றவர் ஒரு கட்சியின் பிரதிநிதி, முக்கியஸ்தர் என்ற அடிப்படையில் கட்சியின் மத்திய குழு கூடி சிவில் சமூகம் முன்மொழிந்த பொது வேட்பாளருக்கு எதிராக இன்னும் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
அவ்வாறு இருக்கையில் கட்சித் தலைவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவஞானம் ஸ்ரீதரன் தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளர் தேவை என்றும் அதற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கட்சியினுடைய தலைமை யார் என்று தீர்மானிக்க முடியாத நிலையில் கட்சியின் பொறுப்பை விட்டுக் கொடுக்க மனம் இன்றி இறுகக் கட்டிப்பிடித்து இருக்கும் மாவை சேனாதிராசாவையும் அழைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை கூட்டி “நாங்கள் பொதுவேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம்“ என்று அறைகூவல் விடுப்பது எந்த வகை ஜனநாயகமாகும்.
இங்கே “நாங்கள்“ என்று இவர் யாரை குறிப்பிடுகின்றார்? தமிழரசுக் கட்சியையா? அல்லது தமிழரசு கட்சிக்குள் சிங்கள தேசத்தால் புகுத்தப்பட்டிருக்கும் புல்லுருவிகளையா? இவர் தமிழரசு கட்சியினரை இல்லை தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கூறுவாரே? ஆனால் அது சிங்கள தேசத்தின் கையாட்களின் கூட்டத்தையே குறிப்பிடுகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, இவர் தமிழ் மக்கள் ஐக்கியப்படுவதையோ, கட்சிகள் ஐக்கியப்படுவதையோ விரும்பவில்லை என்பதோடு மாத்திரமல்ல. இவை நிகழாமல் தடுக்க தம்மால் எதையும் செய்வோம் என்று அறைகூவல் விடுவதாகவே இந்தக் கூட்டம் அமைந்துவிட்டது. எனவே, யாழ். மத்திய கல்லூரியில் செல்வநாயகம் ஞாபகார்த்தக் கேட்போர் கூட மேடையில் தமிழ் சிவில் சமூகம் முன்வைக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது தமிழ் வேட்பாளருக்கு எதிராக ஊளையிட்ட அனைவரும் சிங்கள தேசத்தின் கையாட்களே.
இந்த தமிழ் தேசிய விரோதிகள் தமிழ் மக்களின் பொது எதிரிகளாகவே பார்க்கப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் இந்த கயவர்களை இப்போது தமிழ் மக்களுக்கு இனங்காட்டி இருக்கிறது. இனிவரும் காலங்களில் இவர்களை துரோகிகள் என்று ஒருபோதும் சொல்லக்கூடாது. இவர்களை தமிழ்த் தேசிய எதிரிகள் அல்லது தமிழ்த் தேசிய விரோதிகள் என்றுதான் அழைக்கப்பட வேண்டும்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஈழத்தமிழர் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கான மதிப்பும், மரியாதையும், கௌரவமும், பாதுகாப்பும் தமிழீழ மண்ணில் தான் கிடைக்கும்.
எனவே, தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பது தாயக மக்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், சகோதரர் தமிழர்களுக்கும் தவிர்க்க முடியாத பங்கும், பாத்திரமும் உண்டு.
ஈழத்தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதையில் தமிழ் அரசியல் பரப்பில் மறைந்திருக்கும் இத்தகைய தமிழ் தேசிய விரோதிகளை துரத்தி அடிக்காமல், கருவறக்காமல் தமிழ் தேசியத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. எனவே தமிழ்த் தேசிய இனம் தமக்குள் இருக்கின்ற புல்லுருவுகளை களை எடுப்பதற்கு தயாராக வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் தேவையும் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 16 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.