வடக்கு தமிழர்களிடம் ஜனாதிபதி வேட்பாளர்கள் கேட்டுள்ள விடயம் : அமைச்சர் டக்ளஸ் விசனம்
தென்னிலங்கை அரசாங்கமோ இந்திய அரசாங்கமோ அல்லது சர்வதேச சமூகமோ அவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருக்கின்றார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள (Jaffna) தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (15.06.2024) நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்து என்ன பேசியிருக்கின்றனர் என்பதும் ஏனைய தமிழ்க் கட்சியினர் என்ன கேட்டிருக்கின்றனர் என்பதும் உங்களுக்கு தெரியும்.
13ஆவது திருத்த சட்டம்
குறிப்பாக இங்குள்ள தமிழ்க் கட்சியினர் அவர்களிடத்தே 'காவாசி தாறியா, அரைவாசி தாறியா, முக்கால்வாசி தாறியா' என்று கேட்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் அப்படி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் தமிழ் மக்களின் போராட்டங்கள் தியாகங்களாலே இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாகவே இந்த 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அத் திருத்தம் நமக்கு கிடைக்கின்ற போது அரைவாசி, கால்வாசி, முக்கால்வாசி என்றெல்லாம் இருக்கவில்லை. அது முழுமையாகத் தான் இருந்தது. அதனை நடைமுறைப்படுத்துகிற காலத்தில் இந்தியா தனது படைகளையும் அனுப்பியிருந்தது. இவ்வாறு ஒருபக்கம் தன்னுடைய படைகளை அனுப்பிய அதேநேரத்தில் இராஜதந்திர ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக பிரச்சினைகளை தீர்க்க விரும்பாதவர்கள் அதிலே ஒன்றுமில்லை என்று அன்றைக்கு கூறிவிட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல், தும்புதடியால் கூட தொடமாட்டோம் என்றும் கூறியிருந்தனர். அன்று இவ்வாறு கூறியவர்கள் இன்று என்ன கேட்கின்றனர் என்று பாருங்கள். இங்கு ஒரு விடயத்தை நான் கூறி வைக்க வேண்டும். அதாவது நீண்ட காலத்திற்கு பின்னர் என்னுடைய நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நானும் ஒரு நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருந்தது.
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
அப்பொழுது அன்றைக்கே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்று இருக்கலாம் என்றும் நாங்கள் எங்கேயோ சென்று இருக்கலாம் எனவும் கூறியிருந்தேன். அதற்கு அவருடைய பதில் என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது. உண்மையில் இதனையே அவர் மனதுக்குள்ளே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனை செய்ய வேண்டிய நேரத்தில் அனைவருமாக செய்யாமல் நாங்கள் எல்லாம் கோட்டை விட்டுவிட்டது என்பது எங்களுக்கு அவமானம் என்று தான் நினைக்கிறேன்.
இன்றைக்கு அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது உண்மையாகவே இதில் தவறிழைத்தது இலங்கையோ இந்திய அரசு அல்லது சர்வதேசமோ அல்ல. அதில் தமிழர் தரப்பு தான் முழுமையாக தவறிழைத்து விட்டிருக்கிறோம். இலங்கை இந்தியா ஒப்பந்தத்தோடு தென் இலங்கை ஆட்சியாளர்களின் குணாதிசய ரீதியான மாற்றங்கள் அன்று ஏற்பட்டிருந்தன.
ஆனால், அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம். எங்களுக்கு நாங்களே வினை விதைத்துக்கொண்டோமே தவிர வேறு யாரும் அல்ல. ஆக தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள். இன்று பாலஸ்தீனத்திலும் காசாவிலும் சர்வதேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது.
இந்திய கடற்றொழிலாளர்கள்
அந்த போரில் அழிவு முற்றுப்பெறும் வரை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நமக்கும் நடந்து முடிந்திருக்கிறது. எனவே இவர்களை நம்பிக் கொண்டிப்பதை விடுத்து நாம் எமது பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என சிந்தித்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கருத்துரைக்கையில்,
"வடமாகாண கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்.
எமது கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான அத்துமீறல்கள் தற்போது நடக்காது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்பது அரசாங்கத்தினதும் விசேடமாக கடற்றொழில் அமைச்சருடையதும் நோக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம்
அந்தவகையில், இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது அதனை இராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்டரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்க தயாராக இருக்கின்றோம். அதற்கான முனைப்புகளிலேயே தற்போதும் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தியாவினுடைய தடைக்காலம் நேற்று முன்தினம் முதல் முடிவடைந்திருக்கிறது. எனினும், தடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இருந்தும் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம். எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடனும் வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளார்.
எனவே, வடமாகாண கடற்றொழிலாளர்களுடைய இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரம் தமிழர்களுக்கு வேண்டும்! ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பந்தனின் செய்தி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |