இஸ்ரேலின் புதிய அரசாங்கத்தை அமைக்கப் போவது யார்! வெளியாகவுள்ள அறிவிப்பு
நாட்டின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை ஏற்கும் வேட்பாளரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(08) அறிவிக்கவுள்ளதாக இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சொக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விட எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றமான நெசெட்டில், 67 உறுப்பினர்கள் ஐசன்கோட்டுக்கும், 46 உறுப்பினர்கள் நெத்தன்யாகுவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம்
முன்னாள் இராணுவத் தளபதியான ஐசன்கோட்டுக்கு ஆதரவாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
எனினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் தெளிவான நிலைமை இல்லை என ஜனாதிபதி ஹெர்சொக் தெரிவித்துள்ளார்.

கட்சிகளுக்கு இடையிலும், ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலும் பரஸ்பர எதிர்ப்புகள் காணப்படுவதால், யாரால் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
இதனால், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சில கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் யூத ஆண்களுக்கு இராணுவச் சேவையிலிருந்து விலக்களிக்கும் சட்டத்தை நிறைவேற்றத் தவறியமை காரணமாகவே அந்தக் கட்சி நெதன்யாகுவிடமிருந்து விலகியுள்ளதாக டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ஐசன்கோட்டின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டெமோக்ரட்ஸ் கட்சியின் உறுப்பினர் யாரிவ் ஒப்பன்ஹைமர், ஞாயிற்றுக்கிழமை ஐசன்கோட்டையே ஜனாதிபதி தெரிவு செய்வார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.