அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து வெளியான தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை குறித்த வரைவுத் திட்டம் குறித்த தகவல்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்த விடயம் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த உடன்படிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே 60 நாட்களுக்குப் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும் எனவும் உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளையும் 30 நாட்களுக்குள் அகற்றுவதாக ஈரான் உறுதியளித்துள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதற்குப் பிரதிபலனாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை இணையாகத் தளர்த்தப்படும். அதன் பின்னர், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கை பற்றிய செய்திகள் தற்போது பரவலாகப் பேசப்பட்டாலும், இதுபோன்ற ஒரு சூழல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இடம்பெற்றிருந்தது.
உடன்படிக்கை
அண்மையில், வெள்ளை மாளிகையும் தெஹ்ரானும் ஒரு சுமுகமான உடன்படிக்கை எட்டப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில சிறிய விவரங்கள் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர், இந்த விவகாரத்தில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிரந்தரமான சமாதான திட்டமொன்றையே விரும்புவதாகவும் தற்காலிக அடிப்படையிலான தீர்வுத் திட்டங்களை விரும்பவில்லை எனவும் ஈரான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.