கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - பின்னணியில் நடக்கும் மர்மம்
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான கொழும்பு 01 இல் அமைந்துள்ள இந்த வளாகம் 5.5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
அதற்கமைய, ஒரு ஏக்கருக்காக மாதத்திற்கு வெறும் 38,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையே அறவிடப்படுகிறது.
கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம்
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டிலிருந்து இந்த குத்தகைப்பணத்தை 5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, இந்த வளாகத்தின் உண்மையான வருடாந்த வாடகைக் பெறுமதி 325 மில்லியன் ரூபாயாகும்.
32 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திற்கு நஷ்டப்படுத்தி, இந்த குத்தகையை மீண்டும் 5 மில்லியன் ரூபாவாகவே வைத்திருப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிங்ஸ்பரி ஹோட்டலில் உள்ள ரகசிய நுழைவாயில்களைக் கொண்ட அதிவேக அறையொன்றில், அமைச்சர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக சலுகைகளை வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த கொடுக்கல் வாங்கல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.