ஐரோப்பாவை வாட்டி வதைத்த ஜூன் மாத வெப்ப அலை: பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலி
மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய கடுமையான வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் 10,000க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆதரவுடன் செயல்படும் 'யூரோமோமோ' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் 10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன.
தீவிரமான வெப்ப அலைகள்
இதில் உயிரிழந்தவர்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர்.
தீவிரமான வெப்ப அலைகள் மனிதர்களுக்கு வெப்ப பக்கவாதம், இதய நோய் மற்றும் சுவாசப் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த காலகட்டத்தில் கொவிட் - 19 போன்ற வேறு எந்த முக்கிய நோய் பாதிப்புகளும் இல்லாததால், இந்த மரணங்களுக்குக் கடுமையான வெப்பமே முதன்மைக் காரணம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடுமையான பாதிப்பு
ஐரோப்பாவின் 27 நாடுகளின் இறப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஜூன் மாத வெப்ப அலையானது பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், மின்சார விநியோகத் தடை, பாடசாலைகள் மூடல் போன்ற அசாதாரண சூழலையும் உருவாக்கியது.
குறிப்பாகப் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகள் மட்டுமே ஜூன் இறுதி வாரத்தில் மிக அதிகப்படியான மரணங்களைப் பதிவு செய்துள்ளன. மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக் காரணம் என்றும், இது போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.