சிங்கள அரசின் இன வேறுபாடு வெளிப்படும் காலிமுகத்திடலும்: தமிழ் தலைமைகள் செய்ய வேண்டியதும் (Photos)
தமிழ் மக்களை படுகொலை வழியில் கையாளும் சிங்கள அரசு சிங்கள மக்களை அணைத்துக் கையாளும் கொடூரத்தை காலிமுகத்திடல் பிரகடனப்படுத்தி நிற்கின்றது.
நான்கு தமிழர்கள் சாத்வீக வழியில் ஒன்று கூடினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
ஆனால் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் மக்களும் சுமாராக ஒரு மாதம் வரை காலிமுகத்திடலில் ஒன்று கூடி நின்று அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குரல் எழுப்புகின்ற போதிலும் அவர்கள் யாரையும் சிங்கள அரசு இம்சிக்காது இதுவரை அணைத்தே நடத்தி வருகிறது.
இது இலங்கையில் சிங்கள அரசின் இனப்படுகொலை ஆட்சியின் இன வேறுபாட்டை தெளிவுற பிரகடனப்படுத்தி நிற்கின்றது.

இது இனப்பாகுபாட்டையும் இனப்படுகொலை ஆட்சியின் வேறுபட்ட முகத்தையும் தெளிவுற பறை அறைந்து நிற்கின்றது. தற்போது காணப்படும் அரசியல் கட்சியின் படி இனப் பாகுபாட்டை காட்டும் துல்லியமான உதாரணம் வேறு ஒன்றும் இல்லை என்று கூறலாம்.
ஆதலால் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் எத்தகைய அரசியல்வாதிகளும், தலைவர்களும் அறிஞர்களும், வெளிநாடுகளில் காணப்படும் எத்தகைய ஜனநாயகவாதிகளும் மற்றும் நீதிமான்களும் எத்தகைய கருத்து குழப்பத்துக்கும் இடமின்றி தெட்டத் தெளிவான இனப்பாகுபாட்டு காட்சியைக் கண்டுகழிக்க காலிமுகத்திடல் துணைபுரிகின்றது.

தற்போது காலிமுகத்திடலில் கூடியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன் வாய்களில் அல்லது சுலோகங்களில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சில செய்திகள் வெளி வந்திருந்தாலும் அவை தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வை நோக்கியவை அல்ல.
மாறாக தாங்கள் கோபப்படும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது தங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு வலுச் சேர்ப்பதற்கு தமிழ் மக்கள் பக்கம் இருக்கும் சில படுகொலை உதாரணங்களை முன்வைக்கின்றார்கள்.
இதில் மக்களுக்கு சாதகமான ஒரு வரலாற்று வளர்ச்சி உண்டு ஆயினும் அது தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத் தரக்கூடிய அடித்தளத்தை கொண்டதல்ல. அதாவது இங்கு தமிழ் மக்களுக்கான எத்தகைய அரசியல் கோரிக்கைகளும் கிடையாது. அதை நோக்கி எத்தகைய அரசியல் சிந்தனைகளும் கூட கிடையாது.

எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்கள் இலவு காத்த கிளிகளாய் ஏமாந்து போகக்கூடாது. தமிழ் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களை கனவுலகில் சஞ்சரிக்கச் செய்திடவும் கூடாது. காலிமுகத்திடலில் கூடி நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் அரசியல் தலைமைத்துவம் எதனையும் கொண்டவர்களல்ல.
இவர்களை கையாள வேறு அரசியல் சக்திகள் விரும்பினாலும் அவர்களிடம் தமிழ் மக்களுக்கான எத்தகைய அரசியல் தீர்வு நிலைப்பாடுகளும் கிடையாது.

இங்கு தமிழ் மக்களை படுகொலை புரிந்த அரசின் ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது உண்மைதான். இந்த நெருக்கடியை உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் கையாளவல்ல தமிழ் தலைமைகள் எதுவும் இதுவரை கண்ணுக்கு தெரியவில்லை.
சிங்கள அரசும், சிங்கள அரசாங்கமும், இனவாத பௌத்த மகாசங்கமும், சிங்கள மக்களும் இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையிற்தான் தமிழ் தலைமைகளும், தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் அதிகம் விழிப்புடன் நிலைமைகளை எடைபோட்டு தமிழ் மக்களுக்கு சாதகமானவற்றை அடையாளம் கண்டு தமிழ் மக்களுக்கு விடுதலை அளிக்கவல்ல தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் தமிழ் தலைமைகள் ஒருபுறம் கையாலாகத்தனமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றன. மறுபுறம் சிங்கள அரசுக்கும், ஆட்சிக்கும் முண்டு கொடுக்கும் வகையில் தமிழ்மக்கள் பக்கமுள்ள முன்னணித் தலைவர்களில் பலரும் செயல்பட்டு வருகின்றனர்.
சில தலைவர்கள் ஒரு தமிழ் பழமொழியைக் கூறி "முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் "என்று முனிவர்கள் பாணியில் சாபமும் சாபவிமோசனமும் கூறுகின்றனர். எமக்கு இத்தகைய சாபமும் வேண்டாம், சாபவிமோசனமும் வேண்டாம். தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வே வேண்டும்.

சிங்கள பக்கம் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளை பார்த்து இனப்படுகொலையின் பின்னணியில் ஒரு உளவியல் திருப்தி அடைவது என்பது தமிழ் மக்களுக்கான தேவை அல்ல.
சிங்கள அரசியலில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய அரசியல் பொருளாதார நெருக்கடியானது தமிழ் மக்களுக்கு எத்தகைய வாய்ப்பை வழங்கி இருக்கின்றது என்கின்ற கணிப்பீட்டின் அடிப்படையில் சிங்கள பக்கம் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிவகைகளைக் தமிழ் தரப்பு காணவேண்டியது இப்போது அவசியமாகும்.
தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசையும், ஆட்சியாளர்களையும், சிங்கள கட்சிகளையும், மகா சங்கத்தையும் மற்றும் நிறுவனங்களையும் பிணை எடுப்பது தமிழ் மக்களின் வேலை அல்ல. மாறாக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் சிங்கள அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான விமோசனத்தை காண வழிவகை தேடவேண்டும்.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை உலகநாடுகள் கொண்டு வரவேண்டும் என்று கோரவேண்டிய அதே தமிழ் மக்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து சிங்கள அரசை பாதுகாப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுவது எவ்வளவு தூரம் சரியாகும்?
சிங்கள அரசுக்கு ஆயுதங்களையும் மற்றும் பொருளாதார உதவிகளையும், இராஜதந்திர உதவிகளையும் செய்து தமிழ் மக்களை படுகொலை செய்ய பல அரசுகள் காரணமாக இருந்தன என்று கூறிய தமிழ் தலைவர்களும், தமிழ் மக்களும் ,தமிழ் அறிஞர்களும் 2009 இனப்படுகொலையின் பின்பு எழுந்த மேற்படி கோரிக்கைகளை இப்போது ஒரு கணம் திரும்பி பார்க்க வேண்டும்,சிந்தித்து பார்க்க வேண்டும்.

சிங்கள அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இத்தருணத்தில் கணம், ஒரு தடவை அனைவரும் புரட்டிப் பார்க்க வேண்டும்.
இன்றைய நிலையில் சிங்கள அரசை பிணையெடுக்கும் அரசியலுக்குப் பதிலாக தமிழ் மக்களுக்கு தீர்வு காணுமாறு வெளிநாட்டு அரசுகளை தமிழ் தலைவர்கள் வற்புறுத்த வேண்டும் . தமிழ் மக்களுக்கு ஆன அரசியல் தீர்வுக்கான நிபந்தனைகளை முன்வைத்து அதன் அடிப்படையில் உறுதியான உத்தரவாதத்தின் கீழ், மூன்றாம் தரப்பு வெளிநாட்டு முன்னிலையில் நடைமுறை சாத்தியமான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் பொருளாதார உதவி செய்தலலைப் பரிசீலிக்கலாம்.

தமிழ் மக்கள் நீதிக்கும், சமாதானத்துக்கும், சுபீட்சத்திற்கும் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெறுவதற்கான வாய்ப்பை இத்தருணத்தில் இந்த நெருக்கடி தந்து இருக்கிறது என்பதே உண்மை.
ஈழத் தமிழ் மக்களுக்கு வரலாறு வழங்கியுள்ள ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை மேலெழுந்தவாரியான வெறும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடும் , அப்பாவித்தனமான அரசியல் பார்வையோடும், நடைமுறைக்கு மாறான சிறுபிள்ளைத்தனமான அரசியல் அணுகுமுறையோடும் தமிழ் மக்கள் இவ்விவகாரத்தை பார்க்கக்கூடாது.

தமிழ் மக்களை அதிகம் ஒடுக்கி , தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்து வந்ததன் நேரடி விளைவே இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி என்ற கருத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச சமஷ்டி கோரிக்கையை முன்னிறுத்தி சாத்வீக வழியில் , ஜனநாயக வழியில் உடனடியாப் போராட வேண்டிய காலம் இது.
You My Like This Video
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri