கோட்டாபயவுடனான மோதல் தீவிரம் - பணியாற்ற முடியாத நிலையில் ரணில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இடையிலான பனிப்போர் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியையும், மக்கள் வங்கியின் தலைவராக சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்காரவையும், இலங்கை வங்கியின் தலைவராக சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவையும் நியக்குமாறு பிரதமர் பரிந்துரை செய்துள்ளார்.
அனுமதி வழங்க மறுப்பு
குறித்த பதவிகளுக்கான பரிந்துரை கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த போதிலும் இதுவரையில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நிதியமைச்சராகப் பதவியேற்று ஒரு மாதத்துக்கும் மேலாகியும், நிதியமைச்சுக்கோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கோ பிரதமரால் நியமனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு முதித பீரிஸை பிரதமர் பரிந்துரை செய்திருந்த போதிலும், இந்த நியமனம் மிக பெரிய போராட்டத்தின் பின்னர் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளால் ஏற்பட்ட நெருக்கடி
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்திலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதாகவும் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இவ்வாறான பனிப்போர் இடம்பெற்றுள்ளமை துரதிஷ்டவசமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.