சுவிட்சர்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன..!
சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.
சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸட்சர்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல்
சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிட்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிட்சலாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிகாட்டியுள்ளார்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுரேஸே பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர்.
கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு 'இரு அரசு' முறையிலான தீர்வு பொருத்தமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர்.
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்த கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர்.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஆனால் அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.
தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம்
அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார்.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே -- அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார்.
ஆனால் இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
அதேநேரம் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.
ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார்.
அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது,அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.
அதேநேரம், போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் - யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார்.
சமஸ்டி ஆட்சி
சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர்.
ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர். அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார்.
இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
அதேவேளை, மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.
சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார்.
2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார்.
இந்த கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது.
அதேநேரம், இந்த கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் A. Nixon அவரால் எழுதப்பட்டு, 21 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




