வற்றிப்போகும் கிணறுகள்: சீனிபுர பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படுவதாகவும், எனினும் தற்போதைய தேவைக்கு அது போதுமானதாக இல்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
மேலும், வறட்சி காரணமாக காடுகளிலும் நீராதாரங்கள் குறைந்துள்ளதால், குடிநீரைத் தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.