ஹரக் கட்டாவுடன் நெருங்கிய உறவில் வெலிகம பிரதேசசபை தலைவர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
வெலிகம பிரதே சபை தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை எழுந்துள்ள நிலையிலேயே லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிடிகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய லசந்த விக்ரமசேகர என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெலிகம பிரதே சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்ச்சைக்குரிய சூழ்நிலை
இதனையடுத்து வெலிகம பிரதே சபை தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை எழுந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த வெலிகம பிரதே சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' எனப்படும் நடுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (22) காலை 10.30 மணியளவில் பிரதேச சபை தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களுக்கு அவரை சந்திக்க நேரம்
இன்று பொது நாள் என்பதால், பொதுமக்களுக்கு அவரை சந்திக்க நேரம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு முகக்கவசம் அணிந்து சாதாரண நபரை போல உடையணிந்து வந்த துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஒரு பெண் தலைவரின் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தில் கையெழுத்திடச் சென்றதாகவும், இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அவர் வெளியே வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.
தலை மற்றும் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் தலைவர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




