வெலே சுதாவின் மரண தண்டனை குறித்து நீதிமன்றின் தீர்ப்பு
பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஓருவராக கருதப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் ‘வெலே சுதா’வின் மரண தண்டனை தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த வெலே சுதா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டுக் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதியரசர்களான மகிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபயசேகர மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிஸ்சை பகுதியில் 7.05 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெலே சுதா குற்றவாளியாகக் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, 2015 அக்டோபர் 14ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய, தற்போதைய பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவினால் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி, பிரதிவாதியான வெலே சுதா தரப்பினால் முதலில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் பின்னர், மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் ரத்து செய்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த இறுதி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேல்முறையீட்டாளரான வெலே சுதா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, இந்த மேல்முறையீட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து விளக்கங்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு எவ்வித சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை எனக் கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்பதை நிராகரித்து அதனை உடனடியாக தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.