13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தாதீர்கள்! எச்சரித்த சரத் வீரசேகர
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையின் இறைமை
"ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தால் இலங்கை பெடரல் (சமஷ்டி) ராஜ்ஜிமாகிவிடும். குறிப்பாக வடக்கு மாகாண சபை சுயாதீன சபையாக மாறும். அவர்களின் தேவைக்கேற்ப சட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறானதொரு நிலைமைக்கே தமிழீழ புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முயற்சித்தார். அதற்காக 30 வருடங்கள் போரிட்டார். போர் மூலம் அடைய முடியாமல்போனதை வேறு வழியில் அடைவதற்குரிய முயற்சியாகவே இது உள்ளது.
எனவே, 13 ஐ நடைமுறையாக்கக் கோரும் யோசனை சுயாதீன நாடான இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
வெளியக பொறிமுறையில் உள்ள அச்சுறுத்தலை நாம் உணர வேண்டும். அது எமது படையினருக்கு ஆபத்தாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.



