நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பல பகுதிகள் பாதிப்பு (Video)
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் மாவட்டத்தில் தொடரும் கனமழை மற்றும் அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 குடும்பங்களை சேர்ந்த 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன, இதன்காரணமாக பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடும் காற்று வீசுவதோடு பல்வேறு அனர்த்தங்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 34 பேரும் மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 4 பேருமாக 19 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மன்னாகண்டல் பகுதியில் மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது.வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்துவரும் நிலையில் குளங்கள் பல வான் பாய்ந்து வருகிறது. இன்னிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 20 பெருங்குளங்களில் 15 குளங்களின் நீர்மட்டம் நிரம்பிய நிலையில் வான் பாயத்தொடங்கியுள்ளதான முல்லைத்தீவு மாவட்ட நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
முத்தையன் கட்டு நீர்பாசன பிரிவின் கீழ் உள்ள விசுவமடுகுளம், உடையார்கட்டு குளம், மருதமடுகுளம், மதவாளசிங்கன் குளம், கணுக்கேணி குளம், வவுனிக்குள நீர்பாசன பிரிவின் கீழ் உள்ள தென்னியன்குளம், அம்பலப்பெருமாள் குளம், மருதங்குளம், பழையமுறுகண்டிகுளம், கோட்டைகட்டியகுளம், மல்லாவிகுளம், தேறாங்கண்டல் குளம் ஆகியன அதன் நீர்மட்டங்கள் நிரம்பிய நிலையில் வான்பாயத்தொடங்கியுள்ளன.
இதேவேளை தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் அதன் மூன்று வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது மூன்று கதவுகளும் இரண்டடி அளவு திறந்துவிடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கில் பெய்துவரும் அதிகளவான மழையினால் தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகமாகிக்கொண்டிருப்பதாகவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதோடு கடும் காற்றும் வீசிவருகின்றது. இன்னும் மழை தொடருமானால் கடும் பாதிப்புக்கள் ஏற்படும் என ல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மழை காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆனந்தபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் அவர்களுடைய வீடுகளில் இருந்து இராணுவத்தினரால் படகு மூலம் கொண்டு வரப்பட்டு ஆனந்தபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் குறித்த ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு வெள்ளம் வர பிரதான காரணம் எமது பகுதியில் உள்ள நீர் செல்லும் கழிவு வாய்க்காலை மறித்து வயல் விதைத்துள்ளார்கள்,
இதுதொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைபாட்டை உடனடியாக சீர்செய்து தருமாறும் தமது போக்குவரத்துக்கு குறித்த பகுதியில் பாலம் ஒன்றை அமைத்து தருமாறும் குறித்த இடத்தில் பாலம் இல்லாமையால் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் கடந்த பத்து நாட்களாக பிள்ளைகள் பாடசாலைக்கு கூட செல்லவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே குறித்த கழிவு வாய்க்காலுக்கு ஊடாக செல்லும் எமது பாதையில் பாலத்தினை அமைத்து தருமாறும் கழிவுநீர் செல்ல இடையூறாக உள்ள வயல்களை அகற்றி நீர் கடலுக்கு செல்ல ஆவண செய்யுமாறும் மக்கள் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 182 பேர் பாதிப்பு. 4 வீடுகள் சேதம் வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 11 குடும்பங்களை சேர்ந்த 37 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களை சேர்ந்த 76 பேருமாக வவுனியா மாவட்டத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேரும் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர். தற்போது தாழமுக்கம் உருவாகியதனாலே இவ் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
வடகீழ் பருவ பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்க
வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இடி மின்னல் தாக்க நிலைமைகளும் காணப்படுகின்றமையினால் . பொதுமக்கள்
பாதுகாப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி
தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார் .
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக மண்டூ - வெல்லாவெளி பிரதான பாதையூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அதன் ஊடாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியூடாக பாடசாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் விசேட போக்குவரத்து ஓழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று காக்காச்சிவட்டை, ஆணைக்கட்டியவெளி பிரதான வீதியும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகள் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரும் போரதீவுப்பற்று பிரதேசசபையும் இணைந்து மக்களை பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளமையினை அவதானிக்கலாம் இதேபோன்று ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்படையினராலும் இராணுவத்தினராலும் விசேட படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள், அலுவலகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் நீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.
25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடு குளம் அடைவுமட்டத்தை அடைந்து 1 அங்குலம் வான் பாய்ந்து வருகிறது. 19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் அடைவுமட்டத்தை அடைந்து 7 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.
இதேவேளை, 10 அடி ஆறு அங்குலம் கொள்ளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 4 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.
8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் அடைவுமட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
நீர் நிலைகளிற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலும் , மாவட்டத்திற்கு மழை பெய்யும் சார்த்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலை மன்னார், பேசாலை, தாழ்வுபாடு மற்றும் மன்னார் நகர பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மன்னார் நகர பகுதியில் வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் மழை வெள்ள நீர் வீடுகளில் தேங்கியுள்ளது.இதனால் மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதே வேளை மாவட்டத்தில் பல பாகங்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ள போதும் மக்கள் இது வரை இடம் பெயரவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
