கனமழையால் தம்பலகாமம் பகுதியில் நீரில் மூழ்கிய தாழ்நிலங்கள்
தம்பலகாமம் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் தம்பலகாமம் பிரதேசத்தின் பல்வேறு தாழ்நிலப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், சில இடங்களில் வயல் நிலங்களுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் சவால்
குறிப்பாக, பெரும் போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயிகள் வயல் நிலங்களைத் தயார்படுத்தி வரும் இக்காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மழை வெள்ளம் விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

வயல் நிலங்களில் நீர் தேங்கியுள்ளதால் நிலங்களை உழுதல், விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விவசாயப் பணிகளை உரிய காலத்தில் முன்னெடுப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் வயல் நிலங்களில் நீர்மட்டம் அதிகரித்து, பெரும் போக நெற்செய்கையின் ஆரம்ப நடவடிக்கைகள் மேலும் தாமதமடையக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்க நிலைமை
எனவே, பிரதேசத்தில் மழைநீர் வடிந்தோடுவதற்கான வடிகால் வசதிகளைச் சீரமைத்தல், நீர்த்தேக்க நிலைமைகளைக் கண்காணித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்படக்கூடிய மேலதிக பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

