தென்பட தொடங்கியுள்ள எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள்! தீவிர மாற்றங்கள் ஏற்படுமென எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பசிபிக் பெருங்கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
சர்வதேச மற்றும் உள்நாட்டு வானிலை நிபுணர்களின் கருத்துகளின் படி, கடந்த ஜூன் மாதம் முதல் எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
எல் நினோ தாக்கம் தீவிரம்
கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரித்து வருவது, எல் நினோ தாக்கம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. மே முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கிடைக்கக்கூடும்.

செப்டெம்பர் மாதத்துடன் அதன் தாக்கம் குறையக்கூடும். புவி வெப்பமயமாதல் மற்றும் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்துக்கு பங்களிக்கக்கூடும்.
குறிப்பாக, படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
வளிமண்டலத்தில் கலக்கும் தூசி
அதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகளால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களும் தூசுத் துகள்களும் அதிகளவில் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

எண்ணெய்க் களஞ்சியங்கள் மற்றும் கப்பல்கள் சேதமடைதல், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகளவில் புகை மற்றும் மாசுப்பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய காரணிகளால் ஏற்படும் வளிமண்டல மாசுபாடு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.