உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இடையே உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்,
மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சத் மற்றும் வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் ஆகியோரின் பேச்சுவார்த்தைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அரசாங்கத்தின் தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ் 17 எண்ணெய் வயல்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவற்றில் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு ஈர்க்கப்படலாம் எனவும், இதன் மூலம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வெனிசுவேலாவில் எண்ணெய் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமெரிக்கா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத தனியார் நிறுவனமொன்று இணைந்து புதிய தனியார் நிறுவனத்தை உருவாக்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பில்லியன் கணக்கான டொலர்
இந்த புதிய நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவுக்கு 55 சதவீதம் அளவிலான கட்டுப்பாடு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் உடனடியாக விலைக் குறைப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெனிசுவேலாவின் சேதமடைந்த எண்ணெய் உற்பத்தி உட்கட்டமைப்பை சீரமைத்து உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகளும் பில்லியன் கணக்கான டொலர்களும் தேவைப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடுகளில் வெனிசுவேலாவும் ஒன்றாகும். அந்நாட்டில் சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வளம் இருப்பதாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.
எனினும், மோசமான உட்கட்டமைப்பு காரணமாக வெனிசுவேலா தற்போது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.