போர் காலத்தில் வடகொரியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள்! நிதி அமைச்சர் தகவல்
உச்ச கட்ட போர் இடம்பெற்ற தருணங்களில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஞாயிறு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க – இலங்கை இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, வடகொரியாவிடமிருந்து ஆயுதம் கொள்வனவு செய்ததாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்புச் சந்தைப் பணத்தைக் கொண்டு இவ்வாறு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் கறுப்புச் சந்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் எரிபொருள் கொள்வனவு செய்ய போதியளவு டொலர்கள் இல்லாத தருணத்தில், புறக்கோட்டைக்குச் சென்று வர்த்தகர்களிடம் டொலர்களை திரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை எடுத்தே பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்டியல் கறுப்புச் சந்தை பண கொடுக்கல் வாங்கல் முறைமை நியாயமானது என்ற வகையில் பசில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.