சட்டத்தரணியின் வீட்டில் சிக்கிய ஆயுதக் களஞ்சியசாலை
இரத்தினபுரி, கொஸ்பெலவின்ன பகுதியில் 73 வயதுடைய சட்டத்தரணி ஒருவரின் வீட்டில், இலங்கை, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சட்டத்தரணி மாரடைப்பால் திடீரென மரணமடைந்துள்ள நிலையில் வீட்டை பரிசோதனை செய்த போது குறித்த ஆயுதக் களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீவிர விசாரணைகள்
இரத்தினபுரி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரத்தினபுரி தலைமையகத்தின் தலைமை பொலிஸ் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு சட்டத்தரணியின் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, வீட்டை சோதனை செய்தபோது ஏராளமான துப்பாக்கிகள், துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள், வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட துப்பாக்கிகளில், 12- போர் பிஸ்டல், ஒரு ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, 12- போர் துப்பாக்கிகளின் 6 அசல் பாகங்கள், 11 பெரல், 2 சிறிய துப்பாக்கிகள், 12- போர் மற்றும் 16- போர் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள், பல துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிகள் குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா?அல்லது வேறு சில குழுக்களுக்கு வழங்கப்பட்டதா, துப்பாக்கிகள் பணத்திற்கு விற்கப்பட்டதா மற்றும் பல துப்பாக்கிகள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டதா என சந்தேகிக்கப்படுவதால் அவை குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



