மனித நேயமிக்க மக்கள் பிரதிநிதியொருவரை இழந்துவிட்டோம்! - இம்ரான் மஹ்ரூப்
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்னசிங்கத்தின் இறப்பின் மூலம் மனித நேயமிக்க மக்கள் பிரதிநிதி ஒருவரை நாம் இழந்து விட்டோம் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
துரைரத்னசிங்கம் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதன் மூலம் கல்விச் சமுகத்தின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரிடம் மனிதாபிமானமே மேலோங்கியிருந்தது. இதனால் இன, மத பேதமற்ற செயற்பாடுகளை அவர் முன்னெடுத்து வந்தார்.
எனக்குத் தெரிந்தவரை பல முஸ்லிம் அன்பர்கள் அவருக்கு இருந்தார்கள். அவர்களோடு மிகவும் அன்பாகப் பழகி வந்தார். குடும்ப உறவினர் போல அவர்களது சுக துக்கங்களில் பங்கு பற்றி வந்ததை நான் அறிந்துள்ளேன். இன்றைய காலகட்டத்தில் இவரைப் போன்ற நல்ல பண்புள்ளவர்களை காண்பது அரிது.
அதிகாரமிக்க பதவிகளை அவர் வகித்து வந்தாலும் நல்ல பண்பும், பக்குவமும் அவரிடம் நிறைந்திருந்தது. இதனால் எல்லோரையும் மனிதர்களாக அவர் பார்த்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் பள்ளிவாயல் அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கீடுகளை அவர் செய்திருந்தமையை நான் நன்கு அறிவேன்.
உயிரினங்களைப் பொறுத்த வரை இந்த உலகம். நிரந்தரமில்லாதது. ஓவ்வொருவருக்கும் பிரிவதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அவரவருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாம் போய்த்தான் ஆக வேண்டும். அந்த வகையில் துரைரத்னசிங்கம் இப்போது எம்மை விட்டும் பிரிந்து சென்றுள்ளார். இவரைப் போல நாமும் ஒரு நாள் பிரிந்து செல்வோம் என்பது உறுதி.
இவரது மறைவின் மூலம் மனித நேயமிக்க ஒருவரை நாம் இழந்துள்ளோம். இனவாதமும்,
மதவாதமும் போசிக்கப்பட்டு வரும் இன்றைய காலத்தில் இவரது இழப்பு கவலையைத்
தருகின்றது. இவரது மறைவின் மூலம் பெருங்கவலையடைந்திருக்கும் அவரது
குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலைக் கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
