கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்: வடக்கு அதிபர்கள் சங்கம் ஆளுநரிடம் உறுதி (Photos)
வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்துள்ளது.
வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த.ஜெயந்தன் தலைமையிலான குழுவினர் , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த உறுதியை வழங்கியுள்ளனர்.
மனு கையளிப்பு
இந்நிலையில் வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு
அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு
குறைந்து செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட ஆளுநர், இந்த விடயங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மாணவர்கள் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதால் மனநிலை ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், வாழ்கையின் அடுத்த நகர்விற்கு அது இடையூறாக அமைவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதோடு , இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநரின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த வட மாகாண அதிபர்கள் சங்கம், இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
அத்துடன் வட மாகாண கல்வி மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் வட மாகாண அதிபர்கள் சங்கத்தினால் மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






