அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினால் வரி வருமானம் அதிகரிப்பு
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினால் வரி வருமானம் அதிகரித்துள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை மீறி 50 பில்லியன் ரூபா அளவிலான கூடுதல் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விரயங்களை வரையறுத்த காரணத்தினால் வரி செலுத்துபவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடிந்ததாகவும், அதுவே உள்நாட்டு வருவாய் துறைக்கு இலக்குகளைத் தாண்டி வருவாய் ஈட்ட உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி வருவாய்
மேலும், வரி செலுத்தும் மக்களின் பணம் நாட்டின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படும்; அதில் எந்த முறைகேடும் இருக்காது என்ற அரசின் உறுதி, வரி வருவாய் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு வருவாய் துறையில் புதிதாக இணையும் உதவி ஆணையர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இக்கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு வரி வருமானம் சரியான முறையில் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற அனுபவம் கொண்ட மக்களின் மனப்பாங்கை மாற்றுவது எளிதல்ல என கூறியுள்ளார்.
ஆனால், அந்த நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் முன்மாதிரியை அரசு தற்போது வரி செலுத்தும் மக்களுக்கு வழங்கி வருவதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)க்கு ஒப்பாக நாட்டின் வரி வருவாய் அதிகரிப்பது ஊழல் குறைவதற்கும் வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.