இரணைமடுக்குளத்தில் நீர் வீண்விரயம் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் வலது கரை பிரதான வாய்க்கால் ஊடாக சிறுபோகச் செய்கைக்கு திறந்து விடப்பட்டுள்ள நீர் பெருமளவில் வீண் விரயமாகி வருவதுடன், சுமார் 4,500 ஏக்கர் நிலப்பரப்பில் அடாத்துப் பயிர்செய்கை மேற்கொள்ளும் பொருட்டு நிலப்பண்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக, இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருகிறது.
கவலை வெளியிட்ட விவசாயிகள்
இந்த நிலையில், இரணைமடுக்குளத்தின் கீழான வலது கரை வாய்க்காலின் கீழ், இம்முறை சிறுபோகச் செய்கைக்கு தீர்மானிக்கப்பட்ட அளவு நீர்பாசனக் காணிகளை விடவும், அதீதமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான பண்படுத்தல் செயன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பழைய வட்டக்கச்சி பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 4,500 ஏக்கர் மானாவாரி நிலங்களுக்கு, இரணைமடுக்குளத்தில் இருந்து வலது கரை வாய்க்கால் ஊடாக திறந்து விடப்பட்ட நீர், மேலுள்ள கட்டமைப்புகளின் ஒத்துழைப்புடன், நீர்ப்பாசனத்திற்கு உட்படாத மானாவாரி நிலங்களில் பயிர்செய்கைக்கு கழிவு வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போதைய நிலை மற்றும் குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைதல் என்பன காரணமாகவும், இவ்வாறான சட்டவிரோத பயிர்செய்கை காரணமாகவும், சட்ட ரீதியான பயிர்செய்கைகளில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

