காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள நீரில் மூழ்கிய ஹட்டன் - டிக்கோயா தோட்டம்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக இன்று(03.08.2026) இந்த வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய டிக்கோயா தோட்டம்
கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது.

2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





