வசந்த முதலிகேவின் கைது அடிப்படை உரிமை மீறல் - உயர்நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை 2022ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமையானது, அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என்று இலங்கை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
2022 ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். எனினும், அவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தமைக்குத் தேவையான எந்தவொரு நியாயமான சந்தேகத்தையும் உறுதிப்படுத்த பொலிஸார் தவறிவிட்டனர் என்று நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
அத்துடன், அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை என்றும் மன்று குறிப்பிட்டது.

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் அரசமைப்பின் 12(1) மற்றும் 13(1) ஆகிய உறுப்புரைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி.ஏ.கே. கமகே மீறியுள்ளார் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த மனுவில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில், அவர் சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
பொதுக் குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் பின்பற்றப்பட வேண்டிய கட்டாய நடைமுறைகளை பொலிஸார் மீறியுள்ளனர் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு தேவையற்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. இம்மனுதாரர் சார்பில் சட்டத்தரணி தானுக்க நந்தசிறி உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.