கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
கொழும்பில் போலி பொலிஸாரினால் கொள்ளை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு நுழைந்த இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை ஆயுதம் தாங்கிய இரு கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பணக்கார தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இந்த வீட்டில் நேற்று காலை தொழிலதிபரின் மனைவி மாத்திரமே இருந்துள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
நேற்று காலை 9.30 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு இருவர் வீட்டுக்குள் நுழைந்தனர்.
பின்னர், வீட்டு உரிமையாளரான பெண்ணின் தலையில் துப்பாக்கியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்து, ஒரு கோடியே 70 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தையும், கிட்டத்தட்ட 25 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
அதிகரிக்கும் போலி கொள்ளையர்கள்
சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கோசல நவரத்ன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் கொள்ளை சம்பவங்கள் இந்த நாட்களில் அதிகரித்துள்ளமையினால் வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.