ஊவா மாகாணத்தில் தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இலங்கையில் தேர்தல் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவித்தல் பலகை ஒன்றினை வீதியில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
பாதை ஒன்றினை சரிவர திருத்தி முடித்து மக்கள் பாவனைக்கு இதுவரை வழங்கப்படாததை சுட்டிக்காட்டிய அவ்வூர் மக்கள் இது தொடர்பில் தேர்தல் வேட்பாளர்களை எச்சரித்து இருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டப்பட்ட அடிக்கல்
திட்ட முன்மொழிவாக அடிக்கல் நாட்டப்பட்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டும் அது இன்றைவரைக்கும் முடிவுறாததினை குறிப்பிட்டு உரைக்கும் வண்ணம் அதனோடு தொடர்புடைய அரசியல்வாதிகளை விழித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பொதுமக்கள் நடந்து கொண்டுள்ளனர்.
பொதுமக்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஊவா மாகாணம்,பதுளை மாவட்டத்திலே பாசறை பிரதேச செயலகத்திற்கு சொந்தமான 89F கெரன்டிஎல்ல பகுதியில் உள்ள மஹாதோவை தொடக்கம் லுனுகலை பகுதி வரை பாதையை அபிவிருத்தி செய்தல் 2018 வருடத்தில் வேலை ஆரம்பிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இன்று வரை (2024) வேலை முடியவில்லை. ஆகவே இதற்கு பொறுப்பான அரசியல்வாதிகள் யாரும் இந்த முறை நடைபெறும் தேர்தலுக்கு கிராமத்திற்கு நுழைவது முறையற்றது." என குறிப்பிட்டு இருப்பதோடு அதன் கீழ் இப்படிக்கு பொது மக்கள் என குறிப்பிட்டு வீதியின் ஓரத்தில் அறிவித்தல் பலகையினை உயரமாக வைத்திருக்கின்றனர்.
மாற்றம் காணுமா?
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் காலத்தில் வாக்கு கேட்டு செல்லும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலம் கடத்தி சென்றுவிடுவார்கள்.
மீண்டும் அடுத்த தேர்தலின் போது மீண்டும் பழையபடியே அவர்களது பொய்யான வாக்குறுதிகளை வீசி பொதுமக்களின் உணர்வுகளோடு விளையாடிச் செல்லும் தேர்தல் கால அணுகுமுறை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வுடன் கூடிய புதிய அணுகுமுறைகள் வெளிப்படைத் தொடங்கியுள்ளது.
இலங்கையின் எல்லா பகுதிகளிலும் இதுபோல் மக்கள் விழிப்படைந்து தங்கள் தேவைகளை நிறைவேற்றித்தரக்கூடிய நிர்ப்பந்தங்களை உருவாக்கும் சக்திமிக்க சிந்தனையை பெற்றவர்களாக மாறிவிடும் போது ஆரோக்கியமான தேர்தல் முடிவுகள் எட்டப்பட்டு உருப்படியான உட்கட்டமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என இது தொடர்பில் சமூகவியல் கற்றலாளர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சமூகவியல் கற்றலாளர்கள் பலரிடம் இது தொடர்பில் மேற்கொண்ட கேட்டல்களின் போது அவர்களின் கருத்துக்களில் ஒருமித்த தன்மை இருந்ததும் இங்கே நோக்கத்தக்கது.
வடக்கு கிழக்கு தமிழர்கள்
காலத்துக்கு காலம் பல அரசியல் தீர்வுக்கான கனவுகளோடு ஒவ்வொரு தேர்தலையும் கடந்து போகும் வடக்கு கிழக்கு தமிழர்கள் இதுபோல் சிந்திக்க தலைப்பட்டு மாற்றங்களை வெளிக்காட்ட முற்பட்டால் பொருத்தப்பாடான தீர்வுகளை அரசியல் ரீதியாகவும் எட்டிவிட முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தெளிவான அரசியல் பார்வையோடு மொழி மீதும் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தெளிவான பற்றுறுதியான வேட்பாளர்களை ஆதரிப்பதோடு வெற்றியின் பின்னர் பொருத்தமான நடத்தையினை வெளிப்படுத்த தவறுவோருக்கு அச்சத்தை ஊட்டக்கூடிய இது போன்ற செயற்பாடுகளை துணிந்து ஒருமித்த முறையில் வெளிப்படுத்தும் உணர்வு மேலோங்கி விட வேண்டும்.
நல்ல மாற்றங்களுக்கான முனைப்புக்கள் பற்றிய வெளிப்பாடுகள் பற்றியும் ஈழத்தமிழர்கள் சிந்திக்க தலைப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |