வங்கிக்கணக்குகளிலிருந்து நேரடியாக பணத்தை இழந்துள்ள பலர்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காரணமாக சமூக ஊடகங்கள் மூலமான இணையவழி மோசடி மற்றும் பண மோசடி நடவடிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் (SCERF) வலியுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலத்தில் இணையக்குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு மோசடி உத்திகளைச் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆள்மாறாட்டம்
குறிப்பாக, அரசாங்க சேவை வழங்குநர்கள், திணைக்களங்கள், நன்கு அறியப்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்காரர்கள், போலிச்சலுகைகள், சிறப்புத் தள்ளுபடிகள், பணப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து, குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகத்தளங்கள் மூலம் கவர்ச்சிகரமான செய்திகளைப் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மோசடியான இணைப்புகளை அனுப்பி இணைப்புகள் மூலம் பணம் செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ பொதுமக்களைத் தூண்டுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிச்செயல்களால் பலர் தங்கள் வங்கிக்கணக்குகளிலிருந்து நேரடியாக பணத்தை இழந்துள்ளதாக அறிக்கைகள் வந்துள்ளன.
வங்கிக்கணக்குகளிலிருந்து நேரடி மோசடி
மேலும், சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் புத்தாண்டு குமாரி போட்டிகள் போன்ற முறைகள் மூலம் புகைப்படங்களைப் பெற்று, அவற்றைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு இலங்கை CERT பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
• சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை தொடராமல் இருத்தல்.
• தனிப்பட்ட தகவல்களின் (தேசிய அடையாள அட்டை எண்கள், வங்கி விவரங்கள் போன்றவை) புகைப்படங்களைப் பகிராமல் இருத்தல்.
• ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP)வெளியிடாமல் இருத்தல்.
அரசாங்க நிறுவனங்களோ அல்லது நம்பகமான தனியார் நிறுவனங்களோ சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் (SMS) அல்லது அறியப்படாத இணைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து இரகசியத் தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை என்றும் நம்பகமான வழிகள் மூலம் சரிபார்க்குமாறு இலங்கை CERT பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.