அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை - புதிய அபராத தொகை
GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் வேக வரம்புகளை மீற வேண்டாம் என வாகன ஓட்டுநர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இனிமேல், மணிக்கு 120 கிலோமீட்டரை கடந்த வேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
“புதிய வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, வேக மீறல் தொடர்பான அபராதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அபராதங்கள்
அதற்கமைய, மணிக்கு 100–120 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 3,000 ரூபாயும்,
120–130 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 5,000 ரூபாயும்,
130–140 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 10,000 ரூபாயும்,
140–150 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 15,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
150 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்குகள் பதிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் வீடியோ கண்காணிப்பு மற்றும் வேகக் கண்காணிப்பு கருவிகள் மூலம் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
GovPay செயலியின் உதவியுடன், வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அந்த இடத்திலேயே ஒன்லைன் மூலம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் செயல்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.




