பிளாஸ்டிக் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
உணவு தயாரிப்பின் போதும், உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவதால் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான எச்சரித்துள்ளார்.
அத்துடன் நீண்ட காலமாக பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், காலை வேளையில் தேநீர் தயாரிக்கும் போது, கொதிக்கும் சுடுநீரை தேயிலையுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்களில் போடுகிறோம் அல்லவா. பிளாஸ்டிக் போத்தல்கள், சாப்பாட்டுப் பெட்டிகள் போன்றவற்றில் முறையான தர நிர்ணயம் இருப்பதில்லை. அதேபோல், வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்து தண்ணீர் போத்தலைக் கொண்டு செல்லாமல் கடையிலிருந்து தண்ணீர் போத்தல்களை வாங்குகிறோம்.
இவை அனைத்திலும் நமக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் செயல்படுகின்றன. இவற்றைத்தான் நாம் 'மைக்ரோ பிளாஸ்டிக்' என கூறுகிறோம். அத்துடன், பிபிஏ (BPA) போன்ற வேறு சில நச்சு இரசாயனங்களும் பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ளன. சில நேரங்களில் குழம்பு வகைகளை பொலித்தீன் உறைகளில் கொண்டு வருகிறோம். சாப்பாட்டுப் பொதிகளில் பொலித்தீனில் கட்டப்பட்ட உணவே இருக்கிறது. இவை அனைத்தின் மூலமும் பெருமளவிலான நச்சுக்கள் உடலுக்குள் நுழைகின்றன.

உறுப்புகள் செயலிழப்பு
இந்த நச்சுக்கள் நீண்டகாலமாக உடலில் சேரும் போது, அவை நமது இரத்த நாளங்கள் ஊடாகப் பயணித்து மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் படிந்துவிடுகின்றன. இவ்வாறு நீண்டகாலம் படிந்திருக்கும் போது அந்த உறுப்புகள் செயலிழக்கக்கூடும். மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களும் உண்டாகலாம்.
பிபிஏ போன்ற இரசாயனப் பொருட்களால் ஹோர்மோன் குறைபாட்டு நோய்கள் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற அசாதாரண நிலைகள் ஏற்படலாம். பலவிதமான தொற்றா நோய்கள் மற்றும் நீண்டகால அழற்சித் தன்மைகள் கூட உருவாகலாம். இறுதியாக, இவை பல்வேறு வகையான புற்றுநோய்களாக வளர்ச்சியடையக்கூடும்.
எனவே, நாம் உணவைத் தயாரிக்கும் போது சுகாதாரப் பாதுகாப்பான உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே உணவுப் பாதுகாப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். சமையலின் போது மண்பாண்டங்கள், உலோகம், கண்ணாடி மற்றும் செராமிக் பாத்திரங்களை நாம் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.