பாரம்பரிய அரசாங்கத்தின் வடிவத்தை நோக்கி நகரும் தேசிய மக்கள் சக்தி - எழும் குற்றச்சாட்டு
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் வேகமாக ஒரு சாதாரண பாரம்பரிய அரசாங்கத்தின் வடிவத்தை எடுத்து வருவதாக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த கூட்டணியின் பலம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், அதற்குள் மக்கள் விடுதலை முன்னணியின் பலம் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாற்று அரசியல் கலந்துரையாடல்
ஆட்சி நடத்துவது என்பது இலகுவான காரியம் அல்ல. தற்போதைய அரசாங்கம் இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, மிகவும் சாதாரணமாகக் எடைபோட்டுக் கொண்டிருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மத மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளைப் பார்க்கும்போது, நாட்டில் உள்ள பிற்போக்குவாத சக்திகளுடன் அரசாங்கம் கைகோர்த்து வரும் ஒரு நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் தீவிரத்தன்மை குறித்து அரசாங்கம் முறையான கவனம் செலுத்தவில்லை எனவும், அரசாங்கத்திடம் ஒருவித பின்னடைவு காணப்படுவதோடு, அது தற்போதுள்ள பாரம்பரிய அரசியல் கட்டமைப்பிற்குள்ளேயே முடங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒரு புதிய மாற்று அரசியல் கலந்துரையாடலின் தேவை எழுந்துள்ளதாக பேராசிரியர் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பயணப்பாதையை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதும், புதிய அரசியல் வழிக்காக உழைப்பதும் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.