யுத்தம் மௌனிக்கப்பட்ட இடத்தில் இருந்தே மக்கள் போராட்டம் மீள் எழுச்சி பெறும்: இ.கதிர்
“யுத்தம் மௌனிக்கப்பட்ட இடத்தில் இருந்தே மக்கள் போராட்டம் மீள் எழுச்சி பெறும்” என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் (E.Kathir) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கின்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ச அரசாங்கம் தன்னுடைய நீதியற்ற செயலை இந்த உலகிற்கு மீண்டும் அம்பலப்படுத்தி நிற்கின்றது.
மேலும், நீதியையும், ஜனநாயகத்தையும் போதிக்கின்ற வல்லலரசு நாடுகளே உங்களுக்கு இலங்கையில் நடக்கின்ற அநீதிகள் புரியவில்லையா? என அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவீரர் நாள் அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து இலங்கை அரச பயங்கரவாதம், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவமானது அரச பயங்கராவாதத்தின் உண்மை முகத்தை காட்டி நிற்கின்றது, முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பயங்கரவாதம் என பெயர் சூட்டிய இந்த அரசு மீண்டும் முள்ளிவாய்க்காலில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.
இந்த உலக மேடையில் நாடகம் ஆடும் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும் சர்வதேச சமூகம் இந்த ஊடக சமூகத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை நியாயம் கேட்கப்போகின்றதா?
உலகத்தின் பயங்கரவாத செயற்பாடுகளின் அதி உச்சகட்ட நிலையை சிங்கள அரசு காட்டியிருக்கின்றது.
சர்வதேசமே நீதியையும் ஜனநாயகத்தையும் போதிக்கின்ற வல்லலரசு நாடுகளே உங்களுக்கு இலங்கையில் நடக்கின்ற அநீதிகள் புரியவில்லையா? அல்லது இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த நடவடிக்கை என்று சொல்லி வேடிக்கை பார்க்கப் போகின்றீர்களா?
இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் தாயக பூமியில் இவ்வாறு தொடர் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுமாக இருந்தால் வடக்கு, கிழக்கில் ஊடகவியளாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வரை மாபெரும் மக்கள் போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்தத் தயங்கமாட்டோம்.
யுத்தம் மௌனிக்கப்பட்ட இடத்தில் இருந்தே மக்கள் போராட்டம் மீள் எழுச்சி பெறும் என்பதனை நாம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.