அடுத்த முறையாவது பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் நாங்கள் விழிப்படைய வேண்டும்: இரா.சாணக்கியன் (Video)
அடுத்த முறையாவது நாங்கள் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் அம்பிலாளந்துறை திசைகாட்டி மையம் நடாத்திய பொங்கல் விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும் இன்று சிறப்பாக நடைபெற்றது.
அம்பிலாளந்துறை திசைகாட்டி மையத்தின் தலைவர் பு.புவனகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிக துறை, கலைகலாசார பீடத்தின் தலைவர் கலாநிதி வ.குணபாலசிங்கம் கலந்து கொண்டார்.
இதன்போது அம்பிளாந்துறையிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர். தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன், புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
பெரும்பாலான மக்களுக்குப் பொங்கலானது இந்த வருடம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். நாளைய தினம் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பால் கறுப்புப் பொங்கல் என்ற தலைப்பிலே பொங்கல் நிகழ்வொன்றை பதுளை வீதியிலே செய்யவிருக்கின்றோம்.
பட்டிப்பளை பிரதேசத்தின் நிலைமை மோசமானதாக இருக்கின்றது. ஒரு சிலரினால் இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்து மக்களைத் திசை திருப்புகின்ற செயற்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஒரு சிலரினால் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தாங்கள் தான் கொண்டு வந்ததாகக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற செயல்களைக் காணமுடிகின்றது.
மறுபக்கம் கெவிலியாமடு கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களே தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத தன்னுடைய ஆதரவாளர்கள் 500 பேரை சிவில் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரிலே இங்கு கொண்டு வந்து தலா மூன்று ஏக்கர் காணிகளைக் கொடுத்து 500பேரை இங்கு குடியமர்த்தியிருக்கின்றார்.
அண்மையில் பிரதேச செயலாளரை ஒரு ரவுடி பிக்கு அச்சுறுத்தியபோது எங்களுடைய பிரதேச மக்கள் கொந்தளிக்கவில்லை. 2013,2014ஆம் ஆண்டு காலப்பகுதியிலே நான் ஆளுங்கட்சி அமைப்பாளராக இருந்தபோது நான் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். அரியநேத்திரன் மக்களை ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
அந்த அம்மணியிடத்தில் அந்தப்பிக்கு தனக்கு அந்தப் பிரதேசத்திலே ஒரு காணி ஒப்பத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். அந்த சம்பவத்திற்கெதிராக மக்களிடமிருந்து எந்தவொரு கண்டனத்தையும் காண முடியாதிருந்தது.
2020, 2021ஆம் ஆண்டுகளில் அரசாங்கமானது சேதனப்பசளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தினூடாக 30ஆயிரம் ரூபா கொடுத்தும் கூட யூரியா வாங்கியிருப்பீர்கள். 30ஆயிரம் ரூபா கொடுத்து யூரியா வாங்கியும் கூட எங்களுடைய பிரதேசத்தில் விளைச்சல் 20,30வீதமேயாகும்.
பொலன்னறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மொனராகலை பிரதேசத்திலே விளைச்சலானது வழமையானது போலவே இருக்கின்றது. அவர்களும் கூடிய விலை கொடுத்தே வாங்கினார்கள். ஆனால் எங்களுடைய பிரதேசத்தில் விஞ்ஞானம் இல்லாமல் போய்விட்டது. அதை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும்.
நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பசளை வேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தைச் செய்திருந்தோம். மாவட்ட செயலகத்தை முடக்குமளவிற்கு ட்ரக்டர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தன. ஆனால் எத்தனையோ விவசாயிகள் இங்கிருந்தும் பட்டிப்பளையிலிருந்து ஒரு ட்ரக்டர்கூட வரவில்லை.
சிங்களவர்கள் போராடி எப்படியாவது பசளையை எடுப்பார்கள், அப்போது எங்களுக்கும் கிடைக்கும் என்ற மனநிலை எங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அடுத்த முறையாவது நாங்கள் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும்.
பல கிராமங்களிலே எங்களுடைய வரியைப் பெற்று மீண்டும் எங்களுக்குத் தருவதனை ஏதோ
அவர்களுடைய வீட்டுச் சொத்தை தருவதுபோல நடந்துகொண்டிருக்கின்றார்கள்.
10கிலோமீற்றர் வீதியை அமைப்பதற்கு 1கிலோமீற்றருக்கு விளம்பரப்பலகை
அமைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.





