தலைமை பொறுப்பில் இருந்து விலகிய ஹசரங்க
கடந்த 6 மாதங்களாக இலங்கை இருபத்துக்கு20 அணியின் தலைவராக செயற்பட்டு வந்த வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) தனது தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
இது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நலனுக்காக என கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வீரராக இலங்கை அணிக்கு எனது பங்களிப்பை எப்போதும் வழங்குவேன் எனவும் அணிக்கும் அணியின் தலைமைக்கும் ஆதரவாக இருப்பேன் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பாரிய அழுத்தம்
நடந்து முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோசமாக செயற்பட்டதால் 'Super 8' சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இது வனிந்து ஹசரங்கவின் இந்த முடிவில் தாக்கத்தை செலுத்தியிருக்கலாம்.
மேலும், ஹசரங்க மீது இலங்கை ரசிகர்களால் பாரிய அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டிருந்தது.
போட்டி தடை
முன்னதாக, வனிந்து ஹசரங்க, காலில் ஏற்பட்ட உபாதையில் இருந்து குணமாகி வந்த நிலையில், இலங்கை அணிக்கு முதன்மை அளித்து ஐபிஎல் போட்டிகளையும் தவிர்த்திருந்தார்.
ஹசரங்கவின் தலைமைத்துவத்தில் இலங்கை விளையாடிய 10 இருபதுக்கு20 போட்டிகளில் 6இல் வெற்றியீட்டியிருந்தது.
அத்துடன், நடுவரை அவமதித்த குற்றச்சாட்டில் அவர் இரண்டு போட்டிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டிருந்தார்.
தற்போது, எல்பிஎல் (LPL) போட்டிகளில் விளையாடி வரும் ஹசரங்க, கண்டி பெல்கோன்ஸ் (Kandy Falcons) அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |