வியாஸ்காந்தினால் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க முடியும்: இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு விளக்கம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சாளர் வியாஸ்காந்த் (V. Viyaskanth) சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டாலும் லீக் போட்டிகளில் சிறந்த முறையில் பிரகாசித்துள்ளார் எனவும், அவருக்கு எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க முடியும் என்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் வியாஸ்காந்த் டி20 உலகக் கிண்ண போட்டித் தொடரில் விளையாடும் இலங்கை தேசிய குழாமின் முதல் 15 பேரில் ஏன் இடம் பிடிக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தெரிவுக் குழுவினர் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
சுழற் பந்து வீச்சாளர்
இதன் போது ஊடகவியலாளர் ஒருவர், “இறுதியாக நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வியாஸ்காந்த் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோரே விக்கட் எடுக்கக்கூடிய பந்து வீச்சாளர்கள் என கூறியிருந்தீர்கள்.
எனினும் துனித் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். வியாஸ்காந்த் இன்னமும் உதிரி வீரராகவே இருக்கின்றார் இதற்கான காரணம் என்ன?
இதற்கு பதில் வழங்கிய இலங்கை தேசிய அணியின் தெரிவுக் குழுத் தலைவர் உபுல் தரங்க, “அநேக சந்தர்ப்பங்களில் எமது அணியில் இரண்டு வீரர்களே சுழற்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். வனிந்து ஹசரங்க மற்றும் மகேஸ் தீக்சன ஆகியோர் விளையாடினர்.
சில வேளைகளில் மேற்கிந்திய தீவுகளில் மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் பார்த்தோம். அணியில் வனிந்து இருப்பதனால் துனித்தை அணியில் இணைத்துக் கொள்ள தீர்மானித்தோம்.
வியாஸ் மற்றும் துனித்
ஏனெனில் வனிந்துவும் வியாசும் லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்கள். இருவரும் போட்டியின் நடுப் பகுதியில் பந்து வீசக் கூடியவர்கள். நாங்கள் வேறு ஒரு தீர்மானத்திற்கு செல்ல நினைத்தோம். அதனால் துனித்தை அணியில் இணைத்துக் கொண்டோம்.
போட்டியின் முதல் பாதியில் பந்து வீசக்கூடிய ஒருவராக துனித்தை குழாமில் சேர்த்துக் கொண்டோம்” என்றார்
இதன்போது ஊடகவியலாளர ஒருவர், “வியாஸ் மற்றும் துனித் ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. வியாஸின் திறமைகள் என்ன என்பது குறித்து சுழற் பந்து வீச்சாளர்களிடம் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய இலங்கை தேசிய அணியின் தெரிவுக் குழு உறுப்பினர் தில்ருவான் பெரேரா “வியாஸ் ஏனைய மூன்று பந்து வீச்சாளர்களையும் விட உயராமானவர்.
மேற்கிந்திய தீவுகளின் சில ஆடுகளங்கள் மெதுவானதாக இருக்கும். எனவே வியாஸ் வேகமாக பந்து வீசக்கூடியவர் என்பதனால் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானித்தோம்” என்றார்.
இதற்கு மேலும் பதில் வழங்கிய இலங்கை தேசிய அணியின் தெரிவுக் குழு உறுப்பினர் அஜந்த மெண்டிஸ், “குறிப்பாக நாம் அக்கில தனஞ்சய, ஜிப்ரி வென்டர்சே மற்றும் வியாஸ்காந்த் ஆகியோரை உன்னிப்பாக அவதானித்தோம்.
அபார பந்து வீச்சு
வியாஸ்காந்த் டி20 லீக் போட்டிகளில் அபாரமாக பந்து வீசுகின்றார். சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டாலும் லீக் போட்டிகளில் சிறந்த முறையில் பிரகாசித்துள்ளார். நாம் அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
அவரால் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க முடியும் என நாம் கருதுகின்றோம். இதனால் வியாஸ்காந்த்துடன் உதிரி வீரராக அழைத்துச்செல்ல தீர்மானித்தோம்.” என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை தேசிய அணியின் தெரிவுக் குழுத் தலைவர் உபுல் தரங்க, தெரிவுக் குழு உறுப்பினர்களான தில்ருவான் பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் டி20 உலகக் கிண்ண வீரர்கள் தெரிவு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
ஜனாதிபதி வாழ்த்து
இதற்கமைய, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
வனிது ஹசரங்க தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி நாளை (14) காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
வீரர்களை ஊக்குவித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, நாட்டிற்கு சிறந்த வெற்றியுடன் வருமாறு அவர்களை வாழ்த்தினார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற முதலாவது பிரிவு ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணியும் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது.
பல வருடங்களின் பின்னர் ரக்பி விளையாட்டில் கிடைத்துள்ள இந்த வெற்றியையிட்டு நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, வீரர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |