அணு ஆயுதப் போர் அபாயம்: அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உக்ரைன் போரின் பின்னணியில் மேலைத்தேய நாடுகளுடனான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நேரடி இராணுவ மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இன்று (24) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் தொடர் இராணுவ உதவிகள் மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அணு ஆயுத சக்திகளுக்கு இடையே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய பாதுகாப்பு
இத்தகைய மோதல் உலகளாவிய பாதுகாப்புக்கு ஈடுகட்ட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ரஷ்யா தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

மேலைத்தேய நாடுகள் ரஷ்யாவின் மூலோபாய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், அணு ஆயுதக் கொள்கையின் அடிப்படைகளை மீறும் வகையில் செயல்படுவதாகவும் கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரத்தில், அணு ஆயுதப் போரில் எவரும் வெற்றி பெற முடியாது என்றும், அத்தகைய போர் ஒருபோதும் நடத்தப்படக்கூடாது என்பதில் ரஷ்யா உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இறையாண்மைக்கு ஆபத்து
இருப்பினும், தனது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கப்போவதில்லை என மொஸ்கோ எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கை சர்வதேச சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகத் தலைவர்கள் பதற்றத்தைத் தணிக்க இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.