அரசியல் சூழ்ச்சிக்காக மக்களின் துயரத்தை பயன்படுத்த கூடாது: வியாழேந்திரன் தெரிவிப்பு
அரசியல் வியாபாரத்திற்காகவும், இலாபத்திற்காகவும் மக்களின் துயரத்தைப் பயன்படுத்த கூடாது என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - மண்முனை பகுதி விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"முள்ளிவாய்க்காலில் 2009இல் கொத்துக் குண்டுகளுக்கு அகப்பட்டு எமது சமூகம் அழிந்தபோது கணவன், மனைவி, பிள்ளைகள், மற்றும் உடமைகள் அனைத்தையும் இழந்து, மக்கள் சிதறி குடிப்பதற்கு கஞ்சி கூட இல்லாமல் எதிர்கொண்ட மாதம் தான் இந்த மே மாதம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அந்த சம்பவத்தை மக்கள் நினைவுகூரத்தான் வேண்டும். அதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சில அரசியல்வாதிகள் பாதாகைகளைக் கட்டிக் கொண்டு, அவர்களின் கட்சியின் பெயர்களையும் பொறித்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்ட்டிப்பதாகத் தெரிவிக்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு வடகிழக்கில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருந்தார்கள்? இது தொடர்பில் ஊடகங்களும் கேள்வி எழுப்ப வேண்டும்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மக்கள் கொத்துக் குண்டுகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வரும்போது தேசியம் பேசியவர்கள் ஒருவரும் நாட்டில் இல்லை.
ஜனாதிபதியின் கருத்து
தற்போது பார்த்தால் பதாகைகளைக் கட்டிக் கொண்டு கஞ்சி கொடுக்கின்றார்கள். அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் மக்களின் துயரத்தைப் பாவிக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினைத்தை அனுஸ்ட்டிப்பதற்கு சகல உரிமையும் உள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது.
அந்த மக்கள் அந்த சம்பவங்களை நினைவு கூருவதற்கு சகல உரிமையும் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அதனை எந்த பிரிவினரும் தடுக்கக்கூடாது. அதைத்தான் நாங்களும் தெளிவாகச் சொல்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |