தொடர்ந்தும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்! உருத்திரகுமாரன் அறிவிப்பு

Sri Lanka Today Knights day Visuvanathan Rudrakumaran Tamil People
By Independent Writer Nov 27, 2021 03:39 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை என தனது மாவீரர் நாள் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் (V. Rudrakumaran ) தெரிவித்துள்ளார்.

தனது மாவீரர் நாள் குறித்த அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

இன்று தேசிய மாவீரர் நாள்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தமது இனிய உயிர்களை ஈகம் செய்த நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோயில்களில் வைத்துப் பூசிக்கும் நாள்.

தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினை தம் நெஞ்சக்கூட்டினுள் சுமந்து, நெருப்பாறுகள் பலவற்றைக் கடந்து, போர்க்களத்தில் தம் பெரும் வீரத்தை நிலைநிறுத்தி, தமிழீழ தேசத்தின் இருப்பை, அத்தேசத்தின் சுதந்திரத்துக்கான துடிப்பை உலகப்பரப்பில் ஓங்கி முரசறைந்த நம் தேசப் புதல்வர்களின் திருநாள்.

தமிழீழ மக்கள் சிங்கள பௌத்த பேரினவாதப் பூதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு தேசிய சுதந்திரம் அடைந்தவர்களாக, சமூக அநீதி நீங்கி, சமூக நீதி நிலவுகின்ற, பெண்அடிமைத்தனம் அகன்ற, சாதி, சமய, பிரதேச, பொருளாதார சமத்துவம் நிலவுகின்ற சமூகமொன்றில் சமூகவிடுதலை அடைந்தவர்களாக, உன்னத வாழ்வை வாழ வேண்டும் என்ற உயரிய கனவுடன் நம் மண்ணில் விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் பெருநாள்.

மாவீரர்கள் இலட்சிய உறுதி நிரம்பியவர்களாகக் களமாடினார்கள். தமது இலட்சியம் மனித அறத்தின் அடிப்படையிலானது என்பதில் மிகுந்த தெளிவோடு போர்க்களத்தில் எதிரியை எதிர்கொண்டார்கள்

நாம் எந்த மக்களது மன்ணையும் ஆக்கிரமிக்கவில்லை என்ற அறத்துணிவோடு, தமிழீழ தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடுவது தமது வரலாற்றுக்கடமை என்ற தற்துணிவோடு களமாடினார்கள்.

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் தமிழீழ மக்களது அரசியல் உரிமை என்பதிலும், தமிழர் தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்துக்கு அனைத்துலக சட்டங்களில் இடம் உண்டு என்பதிலும் தளராத மனவுறுதி கொண்டு விடுதலைப் போராளிகளாய் களத்தில் நின்றார்கள்.

மாவீரர்களின் போராட்டம் அறநெறி வழி நின்றதால் எப்போதும் அவர்களது உறுதியும் ஓர்மமும் வானளாவி நின்றன. ஆட்பலத்திலும், ஆயுத பலத்திலும் பல்மடங்கு பலத்தைக் கொண்டிருந்த சிங்கள அரசின் பெரும்படைகளைத் துவம்சம் செய்து போர்க்களத்தில் பெருபெற்றிகள் பலவற்றை நமது மாவீரர்கள் குவித்தனர்.

போர்க்களத்தில் தார்மீக பலம் பொருட் பலத்தை விட மூன்று மடங்கு வலியது என்ற நெப்போலியனின் கூற்றுக்கு உதாரணமாக போர்க்களத்தில் நம் மாவீரர்கள் களம் கண்டார்கள். தமக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட அரசை அமைக்கும் தேசத்தின் சுதந்திர வேட்கையைச் சுமந்தவர்களாய், தமிழீழத் தேசத்தின் பெரும் கனவுக்கு உயிர் கொடுத்தவர்களாய் நமது மாவீரர்கள் நம் கண்முன்னே வாழ்ந்தார்கள். நம் மண்ணில் விதையாய்ப் புதைந்தார்கள்.

நமது மாவீரர்களின் போராட்டம் ஆக்கிரமிப்புக்கானதல்ல. மாறாக சிங்கள பேரினவாத அரசின் இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்களைப் பாதுகாப்பதற்கானது என்பதும் தமிழர் தேசத்தில் சமூகநீதியும் சமத்துவமும் நிலைக்கும் சமூகமொன்றைப் படைக்க வேண்டும் என்பதும் எவ்வாறு உண்மையோ அதுபோலவே நமது மாவீரர்களின் போராட்டம் அனைத்துலக மக்களுக்கு எதிரானதுமல்ல. மாறாக உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடன் தோழமையுணர்வு கொண்டு, உலகின் முற்போக்கான மாற்றங்களுக்கு ஆதரவு வழங்கும் உலகப்பார்வையின் வழிப்பட்டு நின்றது.

தர்மத்தின் சக்கரத்தில் இந்த உலக அரசியல் ஒழுங்கு சுற்றவில்லை. மாறாக நலன்களின் அச்சுகளிலேயே சுற்றுகிறது என்ற உலக அரசியல் குறித்த புரிதலுடனும், புவிசார்அரசியல் குறித்த கவனத்துடனும் தான் மாவீரர்கள் தமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்துள்ளார்கள். வாய்ப்புகள் வரும்போதெல்லாம் அனைத்துலக அரசுகளின் அக்கறையினைப் புரிந்து கொண்டு போராட்டத்தினை நெறிப்படுத்தி நின்றனர்.

உலக அரசுகளின் நலன்களையும் தமிழீழ மக்களின் நலன்களையும் இணைய வைக்கக்கூடிய வாய்ப்புகளையும் வெளிகளையும் கண்டு கொள்ள மாவீரர்கள் தயாராக இருந்தனர். ஆனால் உலக அரசுகளின் நலன்களுக்காக தமிழீழ மக்களின் நலன்களைக் கைவிடவோ அல்லது சமரசம் செய்யவோ மாவீரர்கள் தயாராக இருக்கவில்லை.

இதனால், உலக அரசுகளின் நலன் சமன்பாட்டில் அவர்களின் 'நீதி' சிறிலங்கா அரசின் பக்கம் சரிந்தது. நமது மாவீரர்களையும், விடுதலை இயக்கத்தையும் பயங்கரவாதியாய் முத்திரை குத்தி அந்த உலக சமூகம் மகிழ்ந்தது. அரசியல் அங்கீகாரத்தை மறுத்தது. சிறிலங்கா அரசுடன் இணைந்து கொடிய இனவழிப்புப் போரை நிகழ்த்தினார்கள்.

இப் போரை எதிர்கொண்டு இறுதிவரை இலட்சியத்துக்காகப் போராடி நம் தேசத்தின் புதல்வர்கள் தம்முயிர் ஈந்தார்கள். தமிழீழ தேசத்தின் வரலாறாய் நிமிர்ந்தார்கள். 

நமது மாவீரர்கள் தமது தேசத்துக்கு, நமது தேசத்தின் அரசியற்பாதைக்கு வழிகாட்டியாய் இன்று நிற்கிறார்கள்.

நமது தேசத்தின் காற்றினில் கலந்து, நமது மக்களின் மூச்சினில் இணைந்து நமது தேசத்தைக் காவல் காத்து நிற்கிறார்கள்.

மாவீரர்கள் நினைவு நம் தேசத்தில் இருக்கும்வரை நம் தேசம் என்றும் தலைகுனியாது. எதிரியின் சூழ்ச்சிக்குள் சிக்கிச் சிதைவுறாது. இந்த உறுதியுடன் நாம் நமது மாவீரர்களுக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம். 

இன்றைய தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தலை வணங்கி, தாழ் பணிந்து நமது மாவீர்களுக்குத் தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்பான மக்களே,

நாம் மாவீரர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்பவர்கள். மாவீரர்களின் வரலாற்றை, அவர்களது வீரத்தை, ஈகத்தை, தமிழீழ மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர்கள்கொண்ட பற்றைப், பாசத்தை நேரில் பார்த்தவர்கள். மாவீரர்களும் நமது விடுதலை இயக்கமும் பெண் சமத்துவம் நிலவ எடுத்த முயற்சிகள் குறித்தும், சாதி, சமூக, பிரதேச வேறுபாடுகளால் சமூக அநீதி வெளிப்படுவதைத் தடுப்பதற்கும், இயற்கையைப் பாதுகாப்பதற்கும், பொது மக்கள் சுகாதாரத்தையும் கல்வியையும் வாழ்வையும் மேம்படுத்துவதற்கும் எடுத்த முயற்சிகளுக்குப் பங்காளிகளாக நின்று கண்கண்ட சாட்சிகளாக வாழ்ந்தவர்கள்.

நமது தேசியத்தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நடைமுறையரசு நெருக்கடிக் காலங்களில் எவ்வளவு சிறப்பாகச் செயற்பட்டது என்பதற்கு 2004 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 26 ஆம் நாள் ஏற்பட்ட சுனாமிப் பேரனத்தத்தை நமது தமிழீழ தேசம் கையாண்டமுறை உலகுக்கு முன்னுதாரணமாக இருந்ததையும் நேரில் கண்டவர்கள்.

தமிழீழ நடைமுறையரசின் ஆளுகைக்குள் நமது மக்கள் இருந்த காலத்தில் நள்ளிரவிலும் நமது பெண்கள் சுதந்திரமாய் உலவித் திரிந்தார்கள். போதைப்பொருள் பாவனையோ, ஏனைய சமூகச் சீரழிவுகளோ இல்லாத வாழ்வு நம் தாயகத்தில் இருந்தது. நடைமுறையரசின் நிர்வாகத்தின் மீதும், தமிழீழ காவற்துறை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். இவையெல்லாம் நம் கண்முன்னாலே நிகழ்ந்தவை தான். 

தமிழீழ அரசின் ஆளுகைக்குள் நமது தாயகம் இப்போது இருந்திருக்குமேயானால் தற்போதய கொரோனாப் பெருந்தொற்றுக்காலத்தில், தொற்றைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ்வை வளப்படுத்துவதில் உலகுக்கு முன்னுதாரணமாக நம் தமிழீழத் தாயகம் விளங்கியிருக்கும்.

அத்தகை சிறப்புகள் கொண்ட நமது விடுதலை இயக்கத்தை, மாவீரர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும், முத்திரை குத்தும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நமக்குப் பெரும் வேதனையைத் தருகிறது.

சிறிலங்கா அரசு மட்டுமல்ல உலகின் வலுமிக்க சில அரசுகளும் இதனைச் செய்கின்றன. இது அவர்களின் அரசியல் வியூகம் என்பது நமக்குப் புரிந்தாலும் இவற்றை எதிர்க்க வேண்டியது மாவீரர்களுக்கு நாம் செய்ய வேண்டிய வணக்கத்தின் ஒரு பகுதியாகவே நாம் பார்க்கிறோம்.

நமது போராட்டத்தின் அரசியல் நியாயத்தை நிலைநிறுத்தவும், நமது எதிர்காலத் தலைமுறைக்கு வரலாறு சரியாகச் சென்றடையவும் நமது மாவீரர்கள் மீது சுமத்தப்படும் பயங்கரவாதிகள் என்ற முத்திரைக்கு எதிராக நாம் செயற்பட்டாக வேண்டும். இம் முத்திரை குத்தும் முயற்சிக்கு எதிராக நாம் அரசியல், சட்ட, இராஜதந்திர வழிகளில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியது நமது இன்றைய கடமையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான பயங்கரவாத முத்திரையையும் தடையையும் அகற்றக்கோரி சட்டப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடாத்துவதற்குத் தீர்மானித்து எடுத்துவரும் நடவடிக்கைகளை இப்பின்னணியில் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிலர் இது அரசியற் பிரச்சனை. இதனை சட்டவழிமுறை மூலமாக வெல்ல முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். இது அரசியற் பிரச்சனை என்ற புரிதல் எமக்குண்டு. சட்டவழிமுறைப் போராட்டத்தை அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே நாம் நோக்குகிறோம.; நமது மாவீரர்கள் பயங்கரவாதிகள் அல்ல என வாதிடுவதற்கும் நிறுவுவதற்கும் கருத்துருவாக்கம் செய்வதற்கும் நாம் முயல்கிறோம்.

எமது அடுத்த தலைமுறையினருக்கும் நமது மாவீரர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதனையும் நமது சட்டப்போராட்டங்கள் மூலமும், இப் போராட்டங்களி;ன் ஊடாக நாம் முன்வைக்கும் கருத்துக்கள் மூலமும் வெளிப்படுத்தி வருகிறோம்.

நமது இச் சட்டப்போராட்டங்கள் தற்போது பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நாம் மேற்கொண்ட சட்டப் போராட்டம் விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அரசாகச் சித்தரித்த வழிமுறை தவறு என்பதை நன்கு வெளிப்படுத்தியிருந்தது. இது பிரித்தானிய அரசுக்கு அழுத்தத்தையும் கொடுத்தது. இருந்த போதும் பிரித்தானிய அரசு தடையை அகற்றாது மீண்டும் அதைக் கொண்டு வந்துள்ளது. நாமும் அதனை எதிர்த்து மீண்டும் எமது சட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 

பிரித்தானிய அரசு இந்தத் தடவை விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தபோது தமிழீழத் தேசியக்கொடி மீது தடையேதும் இல்லை என்பதனை வெளிப்படுத்தியதானது எமக்குப் புதிய வாய்ப்பையும் வெளியையும் வழங்கியுள்ளது. இவ்வாய்ப்பை கையிலெடுத்ததன் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையை சிறப்பு அமர்வு ஒன்றுக்காக சென்ற மாதம் அக்டோபர் 24 ஆம் நாளன்று கூட்டியிருந்தோம். அவ் அமர்வில் இனி வருங்காலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக் கொடி நாளாக விளங்கும் எனத் தீர்மானித்து அறிவித்திருந்தோம்.

முப்பத்தொரு ஆண்டுகட்கு முன்னர் 1990 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரலாற்றின் இரண்டாவது மாவீரர் நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது எமது தேசியக் கொடியின் வரலாறு. முப்பத்தொரு ஆண்டு காலமாக தமிழீழ தேசத்தின் தேசியக் கொடியாக மேன்மையுடன் விளங்கிவரும் இக் கொடிக்குரிய சிறப்பை மீள ஒருமுறை வலுவாக நிறுவவேண்டுமென்ற உந்துதலோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ் வாரத்தின் துவக்கத்தில் சென்ற ஞாயிறு நவம்பர் 21 ஆம் நாளன்று முதலாவது தமிழீழ தேசிய கொடிதினத்தை உலகறிய முரசறைந்து நிறுவியுள்ளது. உலகின் பல முனைகளில் பல தமிழ் அமைப்புக்களின் சிறப்பான பங்குபற்றலோடு எமது இனத்தின், எமது தேசத்தின் கொடிதினம் கொண்டாடப்பட்டது பெருமைக்குரியது. 

தமிழீழ தேசத்தின் மக்கள் அனைவரையும் உலகப் பரப்பில் பிரதிபலிக்கும் இக் கொடி ஈழத் தமிழினத்தின் இறைமையினதும், சுயநிர்ணய உரிமையினதும் வெளிப்பாடு. இது அன்னியரின் ஆட்சியிலும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்திலும் இருந்து விடுதலை பெற்று மீள்வதற்காகப் போராடிவரும் ஈழத்தமிழினத்தின் அளப்பரிய உயிர்க் கொடைகளை நினைவுறுத்தும் கொடி.

எமது உன்னதமான மாவீரர்களது உயிர்த் துடிப்பாக விளங்கிய பெருமைக்குரிய இத் தேசியக் கொடியினை அதற்குரிய அனைத்து மரியாதைகளுடனும் ஈழத் தமிழர் அனைவரும் தம் மனதிலும், தங்கள் மனைகளிலும், தாம் கூடும் இடமெங்கும் ஏந்தி வணங்கி ஏற்றமுடன் பறக்க விட வேண்டுமென இம் மாவீரர்நாளில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக மீண்டுமொருமுறை விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது புதிய சட்டப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. பிரித்தானிய அரசின் முடிவு தவறானது என்பதனை பிரித்தானிய மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்த நாம் இந்தச் சட்டப்போராட்டத்தைப் பயன்படுத்துவோம். மாவீரர்கள் நமக்கு வழங்கியுள்ள தார்மீக பலத்;தின் துணையுடன் இப் போராட்டத்தால் நாம் வெற்றி பெறுவோம் என நம்புவோம்.

இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கைளை நாம் ஆரம்பித்திருக்கிறோம். இச் சட்ட நடவடிக்கையின் ஊடாகத் தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழத் தனியரசு அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்துருவாக்கம் செய்ய முயல்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல எனவும், இவ் அமைப்பு இந்தியாவில் செயற்படுவதற்கோ அல்லது தமிழீழத் தனியரசு குறித்துப் பரப்புரை செய்வதற்கோ தடையேதும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளமை இச் சட்ட நடவடிக்கைகளால் எட்டப்பட்ட நன்மைகளில் ஒன்றாக நாம் கருதுகிறோம்.

அமெரிக்காவிலும் விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்த தடைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம். தடைவிதிக்குரிய காலம் முடிவடைந்தமையால் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்கத்தடை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் புலிகள் அமைப்பைத் தடைப்பட்டியலில் சேர்க்கக்கூடாது என நாம் எமது வாதங்களை சட்டரீதியாக முன்வைத்திருக்கிறோம். இது குறித்த முடிவை அமெரிக்க அரசு இதுவரை எடுக்கவில்லை.

அரசுகள் விரும்புகின்ற நிலைப்பாடுகளுக்கு எல்லா நேரங்களிலும் நீதிமன்றங்கள் உடன்பட்டு விடுவதில்லை. இதுவும் எமக்கு வாய்ப்பாக அமையக்கூடிய சந்தர்ப்பங்களை அதிகரிக்கும். சுவிஸ் நாட்டில் எமது தேசியச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பைக் குற்றவியல் அமைப்பாக அறிவிக்கும்படி சுவிஸ் அரசதரப்பு வாதாடியபோதும் நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு நடைமுறை அரசாக இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பைக் குற்றவியல் அமைப்பாகக் கருதமுடியாது என சுவிஸ் நாட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தமையும் எமக்குச் சாதகமான விடயமாகவே அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு தான் இராணுவ இலக்காக கருதிய இலக்குகளைத் தவிர ஏனைய பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தியதில்லை. புலிகள் அமைப்புக்கு எதிராக தடைகள் விதித்துள்ள நாடுகள் மீதும் தாக்குதல் நடாத்தியதில்லை. 

யுத்தகாலத்தில் தனது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் ஒரு நடைமுறையரசினை அமைத்து, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த அனைத்துவகையான நடவடிக்கைகளையும் எடுத்த விடுதலையமைப்பு அது.

இவ் அமைப்பையும் மாவீரர்களையும் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை அவமதிப்பது போன்றது. சிங்களத்தின் தமிழின அழிப்புக்குத் துணைபோகும் செயலாக அமைவது. தமிழ் மக்களுக்கான அரசியல் ஜனநாயக வெளியினை சுருக்கும் ஒரு நடவடிக்கையாக அமைவது. 

இனவழிப்புக்கு உள்ளாகும் ஒரு மக்கள்கூட்டத்தின் குரலாய், நீதிக்காகப் போராடும் மக்களின் குரலாய் எமது விடுதலை இயக்கத்தின் மீதும் மாவீர்கள் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவா முத்திரையினை அகற்றுமாறு தடைவிதித்துள்ள உலக நாடுகளை இன்றைய மாவீரர்நாளில் நாம் கோருகிறோம்.

அன்பான மக்களே,

இன்றைய காலகட்டத்தில் பழைய ஒற்றை மைய உலக ஒழுங்கு (Unipolar World) சிதைவடையும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரு துருவ உலக அரசியல் ஒழுங்கில் (bipolar World) இருந்து 1989 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய உலகஒழுங்கு உலகில் தோற்றுவிக்கப்பட்டது.

தற்போது சிதையத் தொடங்கிய இவ் ஒற்றை மைய உலக ஒழுங்கு, பல்துருவ உலக ஒழுங்காக வளர்ச்சி அடையும் (Multipolar world structure) என்ற கணிப்பு அரசியல் அறிஞர்களிடம் உள்ளது. அதற்கான அறிகுறிகளும் உலக அரங்கில் தற்போது தெரிகின்றன. உக்கிரேயின் தேசத்தில் ரஷ்யாவினது தொடர்ச்சியான தலையீடு நேட்டோ (NATO) நாடுகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதும், தென் சீனக் கடலிலும் தாய்வானிலும் சீன தேசம் தனது அதிகாரத்தைக் காட்டி வருவதும் சிரிய மத்திய தரை கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கொதி நிலையும் இச் சிதைப்பின் வலிந்து நிகழ்த்தப்படும் சமகால உதாரணங்களாக உள்ளன.

பல்துருவ அரசியல் ஒழுங்கில் பல அதிகாரமையங்கள் இருக்கும். பல்வேறு வகையான கூட்டுக்களும் அணிகளும் இருக்கும். அமெரிக்காவுக்கு மாற்றாக ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் வலுவான கூட்டுக்களை அமைத்துக் கொள்ளும். இந்தியா, பிறேசில் போன்ற நாடுகளும் இவ் அணிகளில் முக்கிய இடத்தை வகிக்கும். அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் நல்லுறவு இருக்கும் அதேவேளை போட்டிகளும் வலுக்கும். இத்தகைய பல்மைய உலக ஒழுங்கில் முரண்பாடும் உறவுநிலையும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச் செயற்படும் தன்மை வெளிப்படும் என்றே அறிஞர் பலர் தெரிவிக்கின்றனர். 

இத்தகைய உலக ஒழுங்கின் வளரச்சியில் ஒவ்வொரு கூட்டும் உலகில் உள்ள அரசுகளைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ள முயலும். இது சிறிலங்கா போன்ற ஒடுக்குமுறை அரசுகளுக்கும் சில வாய்ப்புகளை வழங்கும் நிலையை உருவாக்கக் கூடியது.

இத்தயைதொரு சூழலைச் சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலும். தனது நலன்களையும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் நலன்களையும் ஒன்றிணைய வைத்து தனது நிலையை வலுவாக்க முயலும். தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை விரைவுபடுத்த முயலும்.

இந்த தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தாயகத் தமிழ் மக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்கள் ஓரணியில் அணிவகுத்து நின்று செயற்படுதல் அவசியமானது.

ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் வளர்ச்சி தாயகத்தில் வாழும் மக்களது எழுச்சியில் பெரிதும் தங்கியுள்ளது. தேர்தல் அரசியல் காரணமாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியற்கட்சிகளுக்கிடையேயும், கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளால் தமிழ் தேசிய அரசியல் இயக்கத்தை ஒருமைப்பாட்டுடன் தலைமை தாங்கி முன்னெடுக்க முடியாதநிலை உள்ளது.

இதனால் தேர்தல் அரசியலில் ஈடுபடாத, தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கமொன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இத் தேசிய இயக்கம் தமிழர் தேசத்தின் அரசியற்சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக, சிங்களத்தின் இனவழிப்புக்கு எதிரான அனைத்துலக பொறிமுறைக்கு ஆதரவாக, தமிழர் தாயகத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டுக்காக எழுச்சியுடன் செயற்படவேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் தமிழ் அமைப்புகள் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமக்குள் ஒருங்கிணைந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசிய தேவை. தாயக மக்களதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களதும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, தமிழக மற்றும் உலகத் தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து ஈழத் தமிழ் மக்களுக்கான தேசிய மற்றும் சமூக விடுதலைக்கான மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையிலான செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை வழிநடாத்த தாயகம் புலம் பெயர் தமிழர் தமிழக மற்றும் உலகத் தமிழரைக்கொண்டு ஒரு வழிகாட்டிக்குழு அமைக்கப்பட வேண்டும். 

இவ்வகையான ஒரு கட்டமைப்பு உருவாக்கப் படுமானால் அது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையினை அளிக்கும். தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் வீச்சுப் பெறும்.

இதனைச் சாத்தியப்படுத்துவது மிகவும் நிதானத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் பொறுப்பணர்வுடனும் செயற்படுவதன் மூலம்தான் நிகழக் கூடியது. மாவீரர்களை நாம் வணங்கி நிற்கும் இன்றைய நாளில் இத்தகையதொரு ஏற்பாட்டை நமக்குள் ஏற்படுத்திக் கொள்வது குறித்து நாம் அனைவரும் சிந்திப்பது பயன் தரக்கூடியது.

அன்பான மக்களே,

நமது தமிழீழத் தாயகத்தில் தமிழர் தேசத்தின் இருப்பை வலுவாக்குவது மிகவும் அவசியமானது.

தமிழர் தேசத்தினை வலுப்படுத்தல் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கு மட்டும் உரியதொரு பணியல்ல. தமிழ் மக்கள் ஒவ்வொருவர் முன்னும் உள்ள பணியேதான் இது.

தமிழர் தாயகத்தின் கல்விநிலையை உயர்த்துவது, தமிழ் மக்களது சுகாதாரநிலையை மேம்படச் செய்வது, தமிழர் தாயகத்தின் இயற்கையைப் பாதுகாப்பது, சமூக சமத்துவத்தைப் பேணுவது, பண்பாட்டு வாழ்வை மேம்பாடடையச் செய்வது, தொழில் முயற்சிகளை உருவாக்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது, விவசாய, கடற்தொழில் மற்றும் தொழில்துறைகள் வளர்ச்சியடைய உழைப்பது, சிந்தனைத்திறனை அதிகரிப்பது, மாவீரர் மேன்மையினைப் போற்றுவது, தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழ் மரபுரிமையின் சிறப்பைக் கொண்டாடுவது - இவை போன்று நாம் நாளாந்த வாழ்வில் மக்களாகச் செய்யும் பணிகள் தமிழர் தேசத்தினை வளப்படுத்தும் என்பதனை நாம் மறந்து போய் விடக்கூடாது. 

நாம் மிகவும் கூர்மையான சிந்தனையுடன் செயற்படுவதும், சிறிலங்கா அரசின் சூழ்ச்சிகளை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதும் அவசியமானது. இந்திய நாட்டினையும் இந்திய மக்களையும் நாம் நட்புச் சக்திகளாக வரித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நட்புச் சக்திகளிடம் எமது எதிர்பார்ப்பை நாம் உரத்துச் சொல்வதும் அவசியமானதாகும். தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு 13 வது திருத்தச் சட்டம் என்பது காலாவதியாகிப்போனதொன்று என்பதனைச் சொல்வதற்கு நாம் தயங்கக்கூடாது.

இலங்கை இந்திய ஒப்பந்தமும் 13 ஆம் திருத்தச் சட்டமும் ஒன்றல்ல என்பதனை தாயகத் தவைர்கள் இந்திய அரசிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கடப்பாடு எழுத்தில் உள்ளதும், இணைப்பில் உள்ளவை குறித்ததும் மட்டுமன்றி தமிழர் தலைமைக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இணைந்ததுதான் என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.

13 ஆம் திருத்தச்சட்டம் அரைகுறையாகக் கொண்டுவரப்பட்டு பின்னர் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு குற்றுயிராக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாகத்தான் தற்போது இருந்து கொண்டிருக்கிறது. சிறிலங்கா கலாச்சார ஓருமைப்பாடு என்ற மாயை மூலமும், இந்தியாவே முதல் (Indian first) என்ற கூற்றின் மூலமும் தன்னை இந்தியாவின் நட்பு நாடாக காட்டிக்கொள்ளமுனைகிறது. 

சிறிலங்காவில் சீனா நிலைகொள்ளாமல் இருப்பது இந்தியா சிறிலங்காவில் நிலைகொண்டிருப்பதிலும் பார்க்க, இந்தியாவின் பாதுகாப்பு நலன்;களுக்கு உகந்ததாக அமையும். சிறிலங்கா இந்தியாவின் உண்மையான நட்பு நாடே அல்ல. இந்த உண்மை இந்தியாவுக்கும் தெரியும். இலங்கைத்தீவின் அரசதிகாரம் சிங்கள தேசத்திடம் இருப்பதனால் இந்தியா தனது நலன்களை உறுதி செய்து கொள்வதற்காக சிறிலங்கா அரசுடன் உறவாடுகிறது. இங்கு நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவது எம் மக்கள் மீது கொண்ட கருணையால் மட்டுமல்ல. இலங்கைத்தீவில் இந்தியா தனது நலன்களை அடைந்து கொள்வதற்கான கருவிகளாகவும் நாம் பயன்படுகிறோம், ஈழத் தாயகத்தில் தமிழ் மக்கள் வலுமிக்க மக்களாக இல்லாது விட்டால் காலப்போக்கில் சிறிலங்கா மீது செல்வாக்கு செலுத்த தனக்குரிய வாய்ப்பினை இந்தியா இழந்து விடும். இந்த உண்மையினயும் நாம் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதனால்தான் தமிழின அழிப்பை விரைவுபடுத்தி ஈழத் தமிழ் மக்களை வலுவிழந்த மக்களாக மாற்றுவதற்கு சிங்களம் பகீரத முயற்சி எடுத்து வருகிறது என்பதனையும் நாம் புரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்தவும் வேண்டும். 

இதனால் நாம் வலுவுள்ள மக்களாக நிலைத்து வாழ்வதற்குரிய நிலைப்பாட்டை நாம் இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டும். இது எமது நலன் சார்ந்தது மட்டுமல்ல, இந்திய நலன்சார்ந்த விடயமும் கூட. ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய தேசிய இனம் என்ற அங்கீகாரத்தையும், இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழ் மக்களது பாரம்பரியத் தாயகம் என்பதனையும் இந்திய அரசு பகிரங்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தாயக அரசியல் தலைவர்கள் முன்வைக்க வேண்டும். இது ஏதேவொரு வகையில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிழிவாக வெளிப்பட்ட விடயங்கள்தான். ஆனால் நடைமுறையில் இதற்குரிய இடம் கிடைக்கவில்லை. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

மறுபுறத்தில்; புலம் பெயர்ந்த மக்களின் பிரதிநிதிகளாகிய நாம் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திச் செயற்படுவோம்.

இவ்விரு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக நாம் உணரத் தேவையில்லை. தாயகத் தமிழ் கட்சிகள் திம்பு அடிப்படையினை வெளிப்படையாகப் பேசி, அரசியல் தீர்வுக்கு ஆதாரமாக அவை கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்பட, அதேவேளை அதன் அடுத்த பரிமாணத்துடன் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் செயற்பட எமக்கான அரசியல் வெளி பெரிதாகும். 

தேசியத் தலைவர் அவர்கள் தனது 2008 ஆம் ஆண்டு இறுதி மாவீரர்நாள் செய்தியில் இந்தியாவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட முரண்பாட்டுக்கான காரணத்தையும், இவ்வுறவு சீர்ப்படுத்தப்பட வேண்டிய தேவையினையும் வெளிப்படுத்தியிருந்தார். தேசியத் தலவரது அச் செய்தி இன்றும் காலப்பொருத்தம் உள்ளதாகவே இருக்கிறது.

மாவீரர்களை நாம் வணங்கி நிற்கும் இன்றையநாளில் தமிழ்நாட்டு மக்களதும் இந்திய மக்களதும் ஆதரவோடு நாம் எவ்வாறு தமிழீழத் தனியரசுக்கான இந்திய அங்கீகாரத்தை வென்றெடுக்க முடியும் என்பது குறித்து நாம் மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

அன்பாக மக்களே,

சிறிலங்கா அரசு தற்போது பல்வகையான நெருக்கடிகளுக்கு உள்ளானாலும் தமிழர் தேசத்தின் மீதான இனவழிப்பு இலக்கில் உறுதியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்துவதற்கு தடைகள் விதிப்பதும், தமிழர் தாயகத்தை சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதும், தமிழ்த் தேசியச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்வதும், இராணுவத்தை தமிழர் பகுதிகளில் நிலை கொள்ள வைத்து, தனது உளவு நிரலைத் தமிழர் தாயகப்பகுதிகளில் விரிவுபடுத்தி இராணுவ ஆட்சியினை நடாத்துவதுமாக தமிழர் வாழ்வைச் சிதைக்க முயல்கிறது. 

இதனை போர்க்குணத்துடன் எதிர்த்து நின்று பௌத்த சிங்கள மேலாதிக்கத்துக்கு அடிபணியாத வீரமிக்க மக்களாக நாம் வாழ்வதே வரலாற்றில் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும். நாம் எவருக்கும் அடிபணிந்தவர்கள் அல்ல என்பதனையும் அதுபோல எமக்கும் எவரும் அடிபணிவதனையும் நாம் வெறுக்கவே செய்வோம் என்பதனையும் நாம் உலகுக்கு உரத்துச் சொல்லும் உன்னத மனிதர்களாக வாழ வேண்டும்.

உலகெங்கும் ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் அனைத்து மக்களும் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணும் உலகத் தோழமை கொண்ட மக்களாக நாம் வாழ வேண்டும். 

நமது மாவீரர்களின் கனவை நனவாக்கி, அவர்கள் கனவு கண்ட சுதந்திரமும் பாதுகாப்பும் கௌரவமும், சமத்துவமும் சமூகநீதியும் நிலவும் தமிழீழத் திருநாட்டில் நாம் வாழ வேண்டியதை எமது நியதியாக்குவோம்,

இவற்றையெல்லாம் நாம் எட்டுவதற்கு நமது மாவீரர்கள் நம்மை வழிநடாத்துவார்கள். இதயம் கனத்த நினைவுகளுடன் நாம் நமது மாவீரர்களை வணங்கி நமது பணிகளைத் தொடர்வோம் என உறுதி பூணுவோமாக! நாம் எல்லோரும் சுதந்திரமாக எமது மண்ணில் வாழவேண்டும் என்ற உன்னத இலட்சியத்துக்காக வீரத்துடன் பெருங்களமாடி அறநெறி போற்றி தமிழர் மாண்பை உலகறியவைத்த மாவீரரை எம் தேசத்துக்கென ஈந்தளித்த அற்புதமான அனைத்து பெற்றோரையும் இவ்விடத்தில் சிரம் தாழ்த்தி வணங்கி எனது உரையினை நிறைவு செய்கிறேன். 

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்,

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Gallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US