இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு விஜயம்
இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான 'INS Udaygiri', மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09.2026) கொழும்பை வந்தடைந்தது.
இக்கப்பலின் விஜயம், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துடன் ஒருங்கிணைந்துள்ளது.
விஜயத்தின் நோக்கம்
இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் Mobile Training Team மூலம் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதன் ஊடாக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மேலும், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள்/உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் இக்கப்பல் கொண்டு வந்துள்ளது.

கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் விகாஸ் சூட், இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாகச் சந்திக்க உள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரின் விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கைப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில் கப்பலில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




