விசா மறுப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக பிஃபாவிடம் முறையிட ஈரான் கால்பந்து கூட்டமைப்பு முடிவு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2026 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரான் கால்பந்து அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ண தொடர் ஜூன் 11 அன்று தொடங்குகிறது. இதற்காக, கடந்த மே 18 முதல் துருக்கியின் அந்தால்யா நகரில் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ள ஈரான் நாட்டு வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை தாமதமாக விசாக்கள் வழங்கப்பட்டதாக துருக்கிக்கான அமெரிக்கத் தூதுவர் டாம் பராக் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அறிவிப்புக்கு துருக்கியில் உள்ள ஈரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரைத் தாண்டி, ஒரு சர்வதேச கால்பந்து அணிக்கு இன்றியமையாத அங்கமாக விளங்கும் ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், பொதுச்செயலாளர் ஹெதயத் மோம்பினி, ஊடக இயக்குநர் மொஹ்சென் மொடமெட்கியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு வேண்டுமென்றே அமெரிக்கா விசா மறுத்துள்ளதாக ஈரான் தூதரகம் சாடியுள்ளது.
ஈரான் கால்பந்து கூட்டமைப்பு
அமெரிக்காவின் இந்த அரசியல் கலந்த பாரபட்சமான நடவடிக்கை சர்வதேச விளையாட்டு விதிகளுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தை உலக கால்பந்து நிர்வாக அமைப்பான பிஃபாவிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஈரான் கால்பந்து கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் அண்மையில் ஏற்பட்ட போர் பதற்றங்கள் காரணமாக, ஈரான் அணி தனது தங்குமிடத்தை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவின் திஹுவானா நகருக்கு மாற்றியிருந்தது.
விசா கிடைக்கப் பெறாத நிர்வாகிகள் தற்போதைக்கு அணியினருடன் மெக்சிகோ பயணிக்கும் வேளையில், அவர்களுக்கான விசாவைப் பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகக் கிண்ணத் தொடரில் 'ஜி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் அணி, தனது லீக் போட்டிகளில் நியூசிலாந்து, பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சீட்டல் நகரங்களில் எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள சூழ்நிலையில் இந்த விசா சர்ச்சை வெடித்துள்ளது.