போர்நிறுத்த ஒப்பந்தம் அப்பட்டமாக மீறப்படுவதாக ஈரான் கண்டனம்
ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நிலவி வரும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தத் தாக்குதல் "அப்பட்டமாக மீறியுள்ளதாக" ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஈரானின் சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் உள்ள வசதிகள் இலக்கு வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், சர்வதேச நீர்வழிகளில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தளங்கள் செயல்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நோக்கி ஈரான் ட்ரோன்களை ஏவியதைத் தொடர்ந்து, மேலும் கடல்சார் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கவே இந்த "தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியதாகக் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல் ஏப்ரல் 8-ஆம் திகதி எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுவது மட்டுமல்லாமல், ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒரு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
வாஷிங்டன் நிர்வாகத்திற்குப் பதற்றத்தைக் குறைப்பதில் விருப்பம் இல்லை என்பதை இந்தத் தாக்குதல்கள் காட்டுவதாகவும், ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான பகைமை மற்றும் ஆத்திரமூட்டும் போக்கின் ஒரு பகுதியே இது என்றும் அமைச்சு சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்கு ஈரானிய ஆயுதப் படைகள் தகுந்த மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளித்துள்ளதாகத் தெஹ்ரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8-ஆம் திகதி பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
எனினும், கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஈரானின் வெளிநாடுகளில் முடக்கப்பட்ட எண்ணெய் வருவாய் மற்றும் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.