மாகாண சபை தேர்தலை அரசு திட்டமிட்டு தள்ளிப்போடுகிறது: சஜித்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளினால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபை தேர்தல்களை நடத்துவதை திட்டமிட்டு தள்ளிப்போட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைகளை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியை தோற்கடிப்போம் என்ற கருப்பொருளின் கீழ் இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னரான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு சுமார் 23 லட்சம் வாக்குகள் வரை மக்கள் மத்தியில் இருந்து கைநழுவிப் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சியால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே, மாகாண சபை தேர்தலை நடத்த தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு தயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், மாகாண சபை முறைமையை மீண்டும் செயற்திறன் மிக்கதாக மாற்றவும் இந்த "தேர்தல் ஒத்திவைப்பு" நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.