தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்க முடியாது: வினோநோதராதலிங்கம்
தமிழ் பொதுவேட்பாளருக்கு ரெலோ ஆதரவு வழங்கினாலும் எனது ஆதரவு இல்லை. வன்னி மக்களின் மனங்களை அறிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் நேற்று (05.08.2024) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"ரெலோ கட்சி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. அது ஒரு விசப் பரீட்சை. நான் வன்னி மக்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். அவர்களது நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடும்.
வன்னி மக்களின் ஆதரவு
பொது வேட்பாளருக்கு வன்னியில் ஆதரவு இல்லை. பொதுவேட்பாளர் என்ற ஒன்று வெல்லப்போவதில்லை. சமஸ்டி உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி பொது வேட்பாளரை நிறுத்துகிறார்கள்.
ஆனால் அவர் குறைந்த வாக்குகளை பெறுகின்ற போது மக்களது அபிலாசைகளுக்கு தமிழ் மக்களது அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படும். என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னனி போன்ற தமிழ் தேசிய கட்சிகளும் இந்த கூட்டணியுடன் இணைந்து அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தி செயற்பட்டால் அதற்கு எனது ஆதரவு உண்டு.
அப்போது தான் மக்கள் அதனை ஆதரிப்பார்கள். ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னனி பகிஸ்கரிக்கிறது. தமிழரசுக் கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை. இதனால் தமிழ் வாக்கு சிதறும். சொற்ப வாக்குகளையே பொது வேட்பாளர் பெறுவார்.
இது பாதிப்பை ஏற்படுத்தும். பொது வேட்பாளர் தெரிவில் 7 கட்சிகளும் 7 பொது அமைப்புக்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த கட்சிகளிடமோ அல்லது அந்த அமைப்புக்களிடமோ பொது வேட்பாளராக போடுவதற்கு ஆட்கள் இல்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்காத தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான சட்டத்தரணி கே.வி தவராசா மற்றும் அக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேந்திரன் ஆகியோரில் ஒருவரது பெயரை பரிசீலிக்கிறார்கள். அவர்களிடம் வேட்பாளர் இல்லாது பொது வேட்பாளரை எதிர்க்கும் கட்சியிடம் வேட்பாளரை தேடும் நிலை என்றால் சிந்திக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |