பங்களாதேஷில் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்
முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்ற வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட அரச இறுதி மரியாதையில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் பங்களாதேஷ் சென்றிருந்த போதும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
அமைச்சரை ஏற்றிச் சென்ற விமானம் 31 ஆம் திகதி காலை 9.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 1.00 மணிக்கு டாக்காவில் தரையிறங்கியது.
அமைச்சர் முகம்கொடுத்த எதிர்பாராத சம்பவம்
பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த இறுதிச் சடங்கிற்குச் செல்ல அவருக்கு சுமார் ஒரு மணி நேரம் மீதமிருந்துள்ளது.
விமான நிலையத்தில் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், மறைந்த பிரதமருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் கூடியிருந்ததால் அமைச்சர் ஹேரத்தை ஏற்றிச் சென்ற வாகன அணிவகுப்பு முன்னே செல்ல முடியாமல் போயுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச இறுதி மரியாதை விழாவில் கலந்து கொள்ளத் தவறிய வெளிநாட்டு பிரமுகர் அமைச்சர் ஹேரத் மட்டுமல்ல.
இந்தியா, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இறுதியாக, அமைச்சர் ஹேரத் மற்றும் பிற வெளிநாட்டு பிரமுகர்கள் ஜியாவின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான பேராசிரியர் முகமது யூனுஸையும் அமைச்சர் சந்தித்துள்ளார்.
பின்னர் மறைந்த பிரதமரின் மகனும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மானையும் சந்தித்துள்ளார்.